/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 2.26 கோடி தேயிலை தூள் தேக்கம் :விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி
/
ரூ. 2.26 கோடி தேயிலை தூள் தேக்கம் :விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி
ரூ. 2.26 கோடி தேயிலை தூள் தேக்கம் :விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி
ரூ. 2.26 கோடி தேயிலை தூள் தேக்கம் :விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
குன்னூர் : சந்தையில் கிராக்கி குறைந்ததால், குன்னூர் தேயிலை ஏல விற்பனையில் 2.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் கிலோ தேயிலை தூள் தேங்கியது.
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் குன்னூர் ஏல மையத்தின் மூலம் வாரந்தோறும் விற்கப்படுகிறது. இந்தாண்டின் 30வது ஏலத்தில், மொத்தம் 17.60 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது; இலை ரகம் 12.16 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம் 5.44 லட்சம் கிலோ அடங்கும். இந்தாண்டு விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இதுவே அதிகபட்சம். வரத்து அதிகரித்த நிலையில், உள்நாடு, வெளிநாடு ஏற்றுமதிக்கான கிராக்கி குறைந்தது. பாகிஸ்தான், ரஷ்ய வர்த்தகர்கள் மட்டும் குறைந்தளவு தேயிலை தூளை வாங்கினர்; வழக்கமாக பங்கெடுக்கும் எகிப்து, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகர்கள் வரவில்லை. கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உட்பட வட மாநில வர்த்தகர்களின் பங்களிப்பும் சுமாராக இருந்ததால், விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் 2.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் கிலோ தேயிலை தூள் தேங்கியது. அனைத்து ரக தூளின் விலையும் கிலோவுக்கு 3 ரூபாய் விலை குறைந்தது; ஒரு கிலோ தேயிலை தூளின் சராசரி விலை 56 ரூபாயாக இருந்தது. சிடிசி ரக தூளில், அதிகபட்சம் கிலோவுக்கு 151 ரூபாய் விலை கிடைத்தது. 'ஆர்தோடாக்ஸ்' ரகத்தில் அதிகபட்சம் கிலோவுக்கு 191 ரூபாய் விலை கிடைத்தது. இலை ரகத்தில் சாதாரண ரக தூளுக்கு கிலோவுக்கு 36 - 40 ரூபாய், சிறந்த ரக தூளுக்கு 80-125 ரூபாய், டஸ்ட் ரகத்தில் சாதாரண ரக தூளுக்கு 40-45 ரூபாய், சிறந்த ரக தூளுக்கு 85-133 ரூபாய் விலை கிடைத்தது. வரும் 4,5 தேதிகளில் நடத்தப்படவுள்ள அடுத்த ஏலத்துக்கு, மொத்தம் 16.31 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு உள்ளது. ஏலத்தில் விற்கப்படும் தேயிலை தூளின் விலை அடிப்படையில் தான் நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பசுந்தேயிலைக்கு விலை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், இந்த வார ஏலத்தில் விலை வீழ்ச்சியடைந்ததால், ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு 8 ரூபாய் மட்டுமே விலை கிடைத்தது; 'கிலோவுக்கு 10 ரூபாய்க்கும் குறைவாக விலை கிடைத்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.