/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி, கோவை வாடகை வாகன டிரைவர்கள் பிரச்னையில்... தற்காலிக தீர்வு!: ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம்
/
நீலகிரி, கோவை வாடகை வாகன டிரைவர்கள் பிரச்னையில்... தற்காலிக தீர்வு!: ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம்
நீலகிரி, கோவை வாடகை வாகன டிரைவர்கள் பிரச்னையில்... தற்காலிக தீர்வு!: ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம்
நீலகிரி, கோவை வாடகை வாகன டிரைவர்கள் பிரச்னையில்... தற்காலிக தீர்வு!: ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம்
ADDED : டிச 19, 2025 05:25 AM

ஊட்டி: நீலகிரி, கோவை மாவட்ட வாடகை வாகன டிரைவர்களின் பல ஆண்டுகள் பிரச்னைக்கு, ஊட்டியில் நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.
'கோவையில் இயங்கி வரும், தனியார் வாடகை நிறுவனங்களின் கார்கள் வாயிலாக, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணியரை அழைத்து வருவதால், நீலகிரி வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,' என, நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, கோவை தனியார் வாடகை வாகன நிறுவனங்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி, 'புக்கிங் ஐ.டி இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது,' என, முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதையெல்லாம் மீறி தொடர்ந்து சில தனியார் நிறுவன வாகனங்கள் நீலகிரிக்குள் வந்ததால், நீலகிரி மற்றும் கோவை வாடகை வாகன டிரைவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.
சட்டம் - ஒழுங்னைபிரச்னை இந்நிலையில், சமீபத்தில் கோவையில் இருந்து நீலகிரி வந்த வாடகை வாகன டிரைவர், திரும்பி செல்லும் போது பயணிகளை ஏற்ற முயன்றதால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வாடகை வாகன டிரைவர்கள் மேட்டுப்பாளையம் கல்லாரிலும், நீலகிரி வாடகை வாகன டிரைவர்கள், ஊட்டியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுப்பதற்காக போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை குன்னுாரில் நடந்தது. அதில் உடன் பாடு எட்டப்படவில்லை.
சோதனை செய்யக் கூடாது இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்ட வாடகை வாகன டிரைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், ஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. நீலகிரி கூடுதல் போலீஸ் எஸ்.பி., சவுந்தரராஜன், ஊட்டி டவுன் டி.எஸ்.பி., நவீன்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர், தனியார் வாடகை வாகன நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட தனியார் வாடகை வாகன டிரைவர்கள் பங்கேற்றனர்.
இதன் முடிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில் இருந்து கோவைக்கும், கோவையிலிருந்து நீலகிரிக்கும் வரும் தனியார் வாடகை வாகனங்கள், 3000-த்தில் இருந்து 3500 ரூபாய் வரை வசூலித்து கொள்ளலாம்; திரும்பி வரும்போது பயணிகளை ஏற்றக்கூடாது,' என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சொந்தமாக வாகனம் வைத்துள்ள உரிமையாளர், டிரைவர்கள் ஏற்று கொண்டனர். மேலும், பிரபல தனியார் நிறுவனங்களும் இந்த விதிமுறையை ஏற்று கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.
போலீசார் கூறுகையில், 'அடுத்த, 2 மாதத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை எந்த ஒரு வாகனத்தையும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த டிரைவர்கள் சோதனை செய்யக்கூடாது. தேவைப்பட்டால் அருகில் உள்ள போலீசாரின் உதவியை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, பிரச்னைக்கு தற்காலிகமாக தீர்வு கிடைத்துள்ளது. ஒருவேளை தனியார் நிறுவனங்கள் இதனை ஏற்காவிட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்,' என்றனர்.

