ADDED : நவ 05, 2025 08:53 PM
ஊட்டி: ஒடிசாவில் இருந்து ஊட்டிக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு போதைப் பொருட்களை பதுக்கி கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். போதை பொருள்களை கடத்திச் செல்லும் முக்கிய வழித்தடமாக நீலகிரி மாறி வருகிறது. சோதனை சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஊட்டி பஸ் ஸ்டாண்டில் வட மாநில வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையிலான போலீசார் பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது அவருடைய பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முனா சாகு,35, என்பதும், ஒடிசாவில் இருந்து ரயில் மற்றும் பஸ்சில் கஞ்சா கடத்தி வந்து நீலகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

