/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை வழித்தட பாதையில் கண்காணிப்பு கோபுரம்
/
யானை வழித்தட பாதையில் கண்காணிப்பு கோபுரம்
ADDED : ஏப் 17, 2025 09:04 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளியில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரங்களின் எல்லை பகுதியில் கோட்டைப்பாடி பகுதி உள்ளது.
இந்த வழியாக, தமிழக -கேரளா யானைகள் வந்து செல்லும் முக்கிய வழித்தடம் அமைந்துள்ளது. மேலும், இதனை ஒட்டி குடியிருப்புகள், கோவில், பள்ளிக்கூடம் மற்றும் அரசு துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
இதனால், யானைகள் வரும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனக்குழுவினரால் இரவு மற்றும் மழை நேரங்களில் காத்திருக்க இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் யானைகள் வந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், வனத்துறை மூலம் கண்காணிப்பு கோபுரம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பணிகள் நிறைவு பெற்றால் யானை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினர் பாதுகாப்பாகவும், இதே பகுதியில் காத்திருந்தும் பணியில் ஈடுபட முடியும்.
இதனால், இப்பகுதியில் யானை - மனித மோதல்கள் குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.