/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தில் ஓணம் திருவிழா கோலாகலம்
/
மலை மாவட்டத்தில் ஓணம் திருவிழா கோலாகலம்
ADDED : செப் 04, 2025 10:41 PM
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குன்னுார் அருகே வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், நாகேஷ் சதுக்கத்தில், நேற்று ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராணுவ வீரர்களால் அமைக்கப்பட்ட பூக்களத்தில், உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் விளக்கேற்றினர்.
முக்கிய நிகழ்வாக, மாவேலி, வாமனன் வேடமணிந்து இடம் பெற்ற நாடகத்தில், கருணை மற்றும் நீதிக்காக நன்கு அறியப்பட்ட மகாபலி ஆண்டிற்கு ஒரு முறை தனது ராஜ்ஜியத்தை பார்வையிட வரும், திருவோண நாள் குறித்த வரலாறு தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கணவர்களின் நீண்ட ஆயுள், குடும்பங்களின் செழிப்பு மற்றும் வெற்றிகரமான திருமணத்திற்காக நடத்திய திருவாதிரைகளி எனும் நடனம் அனைவரையும் கவர்ந்தது.
கேரளாவில், தோன்றிய பண்டைய தற்காப்பு கலையான களரி பயிற்சியை, கண்ணுார் துரோணாச்சாரியர் களரி பயிற்சி மைய குழுவினர் அசத்தினர். மேலும், பரதநாட்டியம், புலிகளி எனும் புலி நடனம், செண்டை மேளம், வெள்ளம் களி எனும் படகு ஓட்டத்தில் ராணுவ வீரர்கள் அரங்கேற்றினர்.
விழாவில், ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, ராணுவ குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா பள்ளியில் நடந்த ஓணம் பண்டிகையில், முதல்வர் அன்பரசி தனராஜ் வரவேற்றார்.
பி.டி.ஏ. தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொடர்ந்து, மாவேலி மன்னரை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடனமாடி அழைத்து வந்தனர்.
மெகா பூக்கோலம் போடப்பட்டு, விளக்கேற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து திருவாதிரை நடனம் மற்றும் மாணவர்களின் பல்வேறு நடனங்கள் இடம்பெற்றது. துணை முதல்வர் ரேணுகா நன்றி கூறினார்.
* கையுன்னி தேவாலய வளாகத்தில் 'ஸ்ரேயஸ்' மகளிர் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலைவர் பாபு வரவேற்றார். இயக்குனர் பாதிரியார் கீவர்கீஸ் தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து, பூக்கோலம் போட்டி, பலுான் உடைத்தல், பாட்டில் வளையல் கோர்த்தல், இசை நாற்காலி, பந்துபிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அருள்மேரி தேவதாஸ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். நிர்வாகி மெர்சி நன்றி கூறினார்.
அம்பலமமூலா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூக்கோலம் போட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியை சகோ., நிஷா பாப்பச்சன் தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் இணைந்து பூக்கோலமிட்டு அசத்தினர்.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அனைத்து மாணவர்களும் ஜாதி, மதம், மொழி பேதமின்றி, ஓணம் பண்டிகை பாரம்பரிய உடை அணிந்து, துறை ரீதியாக பூக்கோலமிட்டு அசத்தினர். தொடர்ந்து கல்லுாரி முதல்வர் (பொ.,) சுபாஷினி தலைமையில், விளக்கேற்றி பண்டிகை நடந்தது. அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
* குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் பல வண்ண பூக்கோலத்துடன் ஓணம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் டாக்டர் ஷீலா, செயலாளர் அல்போன்சா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். கேரள பாரம்பரிய உடையணிந்த மாணவியர், மாவேலியை வரவேற்கும் திருவாதிரைகளி நடனமாடினர்.
அதில், பைக்கில் வந்த மாவேலிக்கு, செண்டை மேளத்துடன், வண்ண காகிதங்கள் பறக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கயிறு இழுத்தல், உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஓணம் பாடல்களுக்கு மாணவியரின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.