ADDED : அக் 28, 2025 11:50 PM

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை -- கோவில் மேடு சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில், 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் இருந்து, பில்லிக்கம்பை சென்று வர, கோவில் மேடு பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம் நடப்பதால், இடுப்பொருட்களை விவசாயிகள் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், 2 கி.மீ., தொலைவில் மாற்று பாதையில் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளதால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவினத்துடன், கால விரயம் ஏற்படுகிறது.சாலையை சீரமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில், தார் சாலை அல்லது கான்கிரீட் சாலையாக மாற்ற, கக்குச்சி ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

