தேயிலை விவசாயிகளுக்கு ரூ.10 கோடி நிலுவை தொகை வழங்க காலகெடு! தொழிற்சாலை உறுப்பினர்கள் பயன் பெற வாய்ப்பு
தேயிலை விவசாயிகளுக்கு ரூ.10 கோடி நிலுவை தொகை வழங்க காலகெடு! தொழிற்சாலை உறுப்பினர்கள் பயன் பெற வாய்ப்பு
UPDATED : ஜூலை 10, 2026 02:59 AM
ADDED : ஜூலை 09, 2026 05:50 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, நுாற்றுக்கு மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் உறுப்பினர்களாக உள்ள, 25 ஆயிரம் சிறு விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை, அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களின் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை பெறுவதற்கு கடந்த, 20 ஆண்டுக்கு மேலாக போராடி வருகின்றனர்.
சிறு விவசாயிகள் பாதிப்பு அதன் ஒரு பகுதியாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில், ' தேயிலை விலை தொடர்பாக, உரிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, மாவட்ட அளவிலான விலை கண்காணிப்பு குழு அமைத்து, கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் சிறு தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு கிடைக்க வேண்டிய உண்மையான விலையை இந்த குழு நிர்ணயம் செய்து வேண்டும்,'என, தெரிவித்தது. ஆனால், பல தொழிற்சாலை நிர்வாகங்கள் இதை முறைப்படுத்தாததால் சிறு தேயிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், பல்வேறு தொழிற்சாலைகளில் விவசாயிகளுக்கு, 10 கோடி ரூபாய் வரை நிலுவை தொகை வழங்க வேண்டி இருந்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி நெலிகோலு சிறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் ராமன் கூறியதாவது:
பல தேயிலை தொழிற்சாலைகள் விலை கண்காணிப்பு குழுவின், கோர்ட் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை. இதனால், மாவட்ட கலெக்டர் தலைமையிலான அந்த குழு கடந்த, 2017 ஆண்டு அக்., 25ம் தேதியிட்ட ஐகோர்ட் உத்தரவு வாயிலாக, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பாக்கி தொகை, 10 கோடி ரூபாயை அந்தந்த தேயிலை தொழிற்சாலைகளின் வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்து, சிறு தேயிலை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கி வேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவினை எதிர்த்து சில தனிப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் கடந்த ஜூன், 25ம் தேதி வெளியிட்ட உத்தரவில், அந்தந்த தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கான பாக்கி தொகையில், 50 சதவீதம் தொகையை, 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள தொகையும் அதன்பின் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
