/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மைய... செயல்பாடுகள் ஆய்வு! குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கு பெருமிதம்
/
ஒட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மைய... செயல்பாடுகள் ஆய்வு! குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கு பெருமிதம்
ஒட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மைய... செயல்பாடுகள் ஆய்வு! குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கு பெருமிதம்
ஒட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மைய... செயல்பாடுகள் ஆய்வு! குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கு பெருமிதம்
ADDED : ஜூலை 25, 2025 08:31 PM

குன்னுார்: குன்னுார் ஒட்டுப்பட்டறை அருகே உள்ள குப்பை மேலாண்மை மையத்தை, ஆசியன் வளர்ச்சி வங்கி குழுவினர் ஆய்வு செய்து சென்றனர். குன்னுாரில், 30 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள், ஓட்டுப்பட்டறை அருகே குப்பை குழியில், கொட்டப்படுகிறது. இங்கு கடந்த, 2019ம் ஆண்டில், நகராட்சி ஒத்துழைப்புடன், 'கிளீன் குன்னுார்' அமைப்பு, குப்பை மேலாண்மை மையத்தை துவக்கி, பிளாஸ்டிக் உட்பட மட்கும், மட்காத குப்பைகளை பிரித்து, மறுசுழற்சி பணிகளை செய்து வருகிறது. துர்நாற்றம் வீசிய இந்த இடம் மலர் தோட்டமாக மாறி உள்ளது.
நாள்தோறும் சேகரிக்கப்படும் 14 டன் தற்போது, 5 டன் மட்காத குப்பைகள், 9 டன் வரையிலான மட்கும் குப்பைகள் கொண்டு வரப்பட்டு மறுசுழற்சி பணிகள் நடக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகளில் 'பைரோலிசிஸ்' எனப்படும் பர்னஸ் போன்ற எண்ணெய் எடுக்க, ஐதராபாத், ராணிபேட்டை பைரோலிசிஸ் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரியலுார் சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பப்படுகிறது.
கடந்த ஐந்தரை ஆண்டுகளில், 11 லட்சத்து 45 ஆயிரத்து 74 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், 4 லட்சத்து 88 ஆயிரத்து 881 கிலோ எரிய கூடிய மற்ற பிளாஸ்டிக் வகைகள் அனுப்பப்பட்டுள்ளது.
மட்கும் கழிவுகளில் இருந்து, தயாரிக்கப்படும் ஆர்கானிக் உரம், விவசாயத்திற்கு மிகுந்த பலன் அளித்து வருகிறது.
ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு இந்நிலையில், பிலிப்பைன்ஸ் மணிலாவை தலைநகராக கொண்டு செயல்படும், ஆசிய வளர்ச்சி வங்கியின் நம் நாட்டு அலுவலர்கள் டில்லியில் இருந்து ஊட்டிக்கு வந்தனர். அவர்கள், நீலகி ரியில் வனத்துறை உட்பட பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக மேற்கொண்டு வரும், ஓட்டுப்பட்டறை மையத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆசிய வளர்ச்சி வங்கி, காலநிலை தகவமைப்பு அரசு அதிகாரி அக்ஷிதா சர்மா தலைமையிலான குழுவினர் கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தையும் கேட்டறிந்தார். குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
'கிளீன்' குன்னுார் அமைப்பு செயலாளர் வசந்தன் கூறுகையில், ''இங்கு குப்பை கழிவுகளை மறு சுழற்சி மேற்கொள்ளும் நிலையில், உரங்கள் தயாரிக்க மட்டும் ஒரு கிலோவிற்கு, 7 ரூபாய் வரை செலவாகிறது.
இந்த உரங்கள் விவசாயிகளுக்கு கிலோ, 3.50 ரூபாய் என வழங்கப்படுகிறது. இங்கு 'ரோகினி நீல் கானி பிலாந்தராபிஸ் பவுண்டேஷன்' பங்களிப்புடன் மேலாண்மை பணிகள் நடக்கிறது.
இங்கு நடக்கும் மறு சுழற்சி முறைகளை அறிந்து கொள்ள பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் வந்து பார்வையிட்டு தயாரிப்பு யுக்திகளை அறிந்து செல்கின்றனர்.
தற்போது ஆசிய வங்கி வளர்ச்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டு சென்றனர். இதன் மூலம் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீலகிரி வனத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளின் பரிந்துரைகளை ஆசிய வளர்ச்சி வங்கி ஆராய்ந்து சென்றுள்ளது.
அதற்கான செயல் திட்ட நிதிகளை பல நாடுகளுக்கு வழங்க இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமான மலை மாவட்டத்துக்கு பயன் ஏற்பட வாய்ப்புள்ளது,' என்றனர்.