/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு வரும் பயணிகளிடம்... 'பார்க்கிங்' கொள்ளை! கலெக்டர் வைத்த கட்டண போர்டை அகற்றி அத்துமீறல்
/
டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு வரும் பயணிகளிடம்... 'பார்க்கிங்' கொள்ளை! கலெக்டர் வைத்த கட்டண போர்டை அகற்றி அத்துமீறல்
டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு வரும் பயணிகளிடம்... 'பார்க்கிங்' கொள்ளை! கலெக்டர் வைத்த கட்டண போர்டை அகற்றி அத்துமீறல்
டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு வரும் பயணிகளிடம்... 'பார்க்கிங்' கொள்ளை! கலெக்டர் வைத்த கட்டண போர்டை அகற்றி அத்துமீறல்
ADDED : டிச 09, 2024 04:41 AM

குன்னுார்: 'குன்னுார் டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுகளை மீறி, 'பார்க்கிங்' கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் டால்பின் நோஸ், சுற்றுலா மையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் வசூலிக்க, மூன்று ஆண்டுகளுக்கு என்ற அடிப்படையில், பர்லியார் ஊராட்சி சார்பில், 2023ல் டெண்டர் விடப்பட்டது.
கலெக்டர் வைத்த போர்டு அகற்றம்
இதில், 'இரு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய் ; கார்களுக்கு, 30 ரூபாய்; வேன்களுக்கு, 50 ரூபாய்,' என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஏப்., மாதம் இது தொடர்பான புகாரில், அப்போதைய மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கட்டண விபரபட்டியல் போர்டு வைக்கப்பட்டது. ஆனால், ஒரே நாளில் இந்த போர்டு சிலரால் அகற்றப்பட்டு, '30, 50, 70 ரூபாய்' என, கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவித்தாலும், அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்காமல், ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கூடுதல் கட்டணம் வசூல்
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'வேன்களுக்கு, 70 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் தொலைவில் இறக்கி விடப்பட்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது,'' என்றனர்.
டிரைவர்கள் கூறுகையில்,'ஆளும் கட்சியினர் பார்க்கிங் டெண்டர் எடுத்து, வேறு நபர்களை கொண்டு கட்டணம் வசூலிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் டிரைவர்களிடம் பார்க்கிங் கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தெரியும்படி, கட்டண விபர போர்டு வைக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனுக்களை அனுப்பி உள்ளோம். மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்,' என்றனர்.
ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் கூறுகையில்,''இது தொடர்பாக, டால்பின் நோஸ் பகுதியில் ஆய்வு நடத்த உத்தரவிடப்படும். பர்லியார் ஊராட்சியில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

