/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு! பிரத்யேக திட்டம் வகுப்பது அவசர அவசியம்
/
ஊட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு! பிரத்யேக திட்டம் வகுப்பது அவசர அவசியம்
ஊட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு! பிரத்யேக திட்டம் வகுப்பது அவசர அவசியம்
ஊட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு! பிரத்யேக திட்டம் வகுப்பது அவசர அவசியம்
ADDED : நவ 03, 2024 10:27 PM

ஊட்டி ; ஊட்டியில் பண்டிகை கால விடுமுறையின் போது தொடரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஊட்டி நகரில் போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாததால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து வருகிறது. சீசன் சமயத்தில், 'நாளொன்றுக்கு சுற்றுலா வாகனங்கள் எண்ணிக்கை, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம்; வார விடுமுறையின் போது, 5 ஆயிரம்; தொடர் விடுமுறையின் போது, 8 ஆயிரம்,' என , சுற்றுலா வாகன எண்ணிக்கை இருந்தது.
இதனால், மலை மாவட்டத்தில் இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தவிர, சுற்றுலா வருபவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல மணி நேரமாவதால் வாகனங்களிலே பொழுதை கழித்து திரும்பும் அவல நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐ-கோர்ட் உத்தரவை அடுத்து, குறைந்தளவிலான வாகனங்களை அனுமதிக்கும் வகையில், இ-பாஸ் திட்டம் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது. தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
தொடர் விடுமுறையால் நெரிசல்
இந்நிலையில், கடந்த, 31ம் தேதி முதல் தீபாவளி தொடர் விடுமுறை வந்ததால், மலை மாவட்ட சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக நகரின் சாலையில் வாகனங்கள் காலை முதல் இரவு வரை ஊர்ந்து சென்றன. முக்கிய சாலைகளான, ஊட்டி- - கோத்தகிரி சாலை; குன்னுார் சந்திப்பு; கமர்சியல் சாலை; பிங்கர் போஸ்ட்; தாவரவியல் பூங்கா சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பல சுற்றுலா பயணிகள் தாங்கள் பார்க்க வந்த சுற்றுலா மையங்களுக்கு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியால் அவதிப்பட்டனர். சில இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை முறை படுத்தினாலும். நெரிசலை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
புறநகர் 'பார்க்கிங்' மிஸ்சிங்
ஊட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் சீசன், தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை முறைபடுத்துவது வழக்கம். இதையும் தாண்டி 'ஹில் கோப்', ஹைவே பேட்ரோல், போலீஸ் உதவி மையம் ஆகியவை செயல்படுகின்றன.
எனினும், இம்முறை புறநகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் போலீசாரின் திட்டமிடலில் பணியில் தொய்வு ஏற்பட்டதால், நகரின் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. நகரில் பணி புரியும் போலீசார் திணற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பிரத்யேக திட்டத்தை இன்னும் வகுக்கவில்லை. இதனால், வரும் சீசனில் கூட இது போன்ற போக்குவரத்து நெரிசலை மக்கள் சந்திக்க வேண்டி வரும்.
இதனை தவிர்க்கும் வகையில், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை அமல் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்,' என்றனர்.