/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை காய்கறி விலை உயர்வால் மக்கள் பாதிப்பு
/
மலை காய்கறி விலை உயர்வால் மக்கள் பாதிப்பு
ADDED : அக் 11, 2024 10:06 PM

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், மலை காய்கறிகளின் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளதுடன், விலையும் உயர்ந்துள்ளது.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 'உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், பூண்டு, பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் இங்கிலீஸ் காய்கறிகளான புரோகோலி, சுக்குனி, ஐஸ்பெர்க், லெட்யூஸ், பிரஸ்சல்ஸ், செலரி, பார்செலி,' உள்ளிட்ட மலை காய்கறிகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி மார்க்கெட் மற்றும் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு, அனைத்து காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதில், உருளை கிழங்கு, பூண்டு உள்ளிட்டவை, என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது. நடப்பாண்டில், மார்ச் இறுதியில் இருந்து தொடர்ந்த மழையால், மலை காய்கறி விவசாயம் வெகுவாக குறைந்தது. தற்போது, காய்கறி வரத்து ஓரளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக அதிகபட்சம், 25 டன் அளவுக்கு மலை காய்கறிகள், ஊட்டி மார்க்கெட்டில் இருந்து, வெளி இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில், ''கடந்த மூன்று மாதத்துக்கு முன், கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட் தற்போது, 40 முதல், 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது,
50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உருளை கிழங்கு, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீட்ரூட், 15 முதல், 20 ரூபாய், தக்காளி, 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதில், தரமற்ற விதை வினியோகம் காரணமாக, வரத்து குறைந்து, சராசரியான வரத்து விற்பனைக்கு வருகிறது. 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஊட்டி பூண்டு, தரத்திற்கு ஏற்ப, 450 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது. முட்டைகோஸ், 20 முதல், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மலை காய்கறி விலை உச்சத்தில் உள்ளதால், உற்பத்தி செய்யப்படும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.