/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுக்கடை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு; தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
/
மதுக்கடை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு; தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
மதுக்கடை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு; தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
மதுக்கடை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு; தடுக்க கோரி கலெக்டரிடம் மனு
ADDED : அக் 01, 2024 10:49 PM

ஊட்டி : ஊட்டி அருகே சோலுார் பகுதியில் மூடப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய ஆறு தாலுக்கா பகுதிகளில் கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன், 'பிரதான சாலை, மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வரும் இடங்கள்,' என, பார்க்கும் இடங்களில், 150 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.
மது பழக்கத்தால், அதிகளவில் சீரழிவுகள் ஆங்காங்கே ஏற்பட்டதை அடுத்து, 'இடையூறு உள்ள இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்,' என, பொதுநலம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு ஏராளமான புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது.
இதன் எதிரொலியாக, கடந்த சில ஆண்டுக்கு முன் எடுத்த நடவடிக்கையால் டாஸ்மாக் மதுக்கடைகளில் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும், 77 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் வாய்மொழி உத்தரவாக, ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய தாலுக்கா பகுதிகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில், 20 கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
'சிறிய மாவட்டமாக உள்ள நீலகிரியில் தற்போது செயல்பட்டு வரும், 77 டாஸ்மாக் மதுக்கடையே அதிகம், இதை குறைக்க வேண்டும்,' என, மாநில முதல்வர், மாவட்ட நிர்வாகத்தை பொது நல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
'மூடப்பட்ட இடங்களில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது,' என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊட்டி அருகே சோலுாரில் கடும் போராட்டத்திற்கு பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதை கிராம மக்கள் அறிந்தனர்.
இதனால், அதிருப்தியடைந்து, சோலுார் கிராம தலைவர் தட்டை தலைமையில், கிராம மக்கள் வந்து, கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

