/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சாலைக்காக நகராட்சி பணியை முடக்கிய மக்கள்; ஐந்து மணிநேரம் தொடர் போராட்டத்தால் தீர்வு
/
கிராம சாலைக்காக நகராட்சி பணியை முடக்கிய மக்கள்; ஐந்து மணிநேரம் தொடர் போராட்டத்தால் தீர்வு
கிராம சாலைக்காக நகராட்சி பணியை முடக்கிய மக்கள்; ஐந்து மணிநேரம் தொடர் போராட்டத்தால் தீர்வு
கிராம சாலைக்காக நகராட்சி பணியை முடக்கிய மக்கள்; ஐந்து மணிநேரம் தொடர் போராட்டத்தால் தீர்வு
ADDED : பிப் 04, 2026 05:25 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே செட்டிவயல் கிராமத்திற்கு செல்வதற்கு, சாலை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் நகராட்சி அலுவலக பணிகளை முடக்கி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி, 5- வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செட்டிவயல் கிராமம் அமைந்துள்ளது.
அங்கு, 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்வதற்கு, சாலை வசதி இல்லாத நிலையில், ஒற்றையடி நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு, 2- கி.மீ., துாரம், வனவிலங்கு அச்சத்தில் நடந்து செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இந்நிலையில், 'தங்கள் கிராமத்திற்கு, சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,' என, கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
சாலை அமைக்க வேண்டிய பகுதி, தனியார் எஸ்டேட் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால், கவுன்சிலர்கள் ஜாபீர், ரமேஷ் மற்றும் கிராம மக்கள் இணைந்து, எஸ்டேட் நிர்வாகத்திடம், அனுமதி கடிதம் பெற்று நகராட்சியிடம் கொடுத்தனர். எனினும் சாலை அமைப்பதில், நகராட்சி மெத்தனம் காட்டி வருகிறது.
இதனால் நொந்து போன கிராம மக்கள், மா.கம்யூ., நிர்வாகி மாறன் தலைமையில், குழந்தைகளுடன் நேற்று காலை, 9:00- மணிக்கு நகராட்சியை முற்றுகையிட்டனர். மேலும், நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களை உள்ளே விடாமல் தடுத்தனர்.
தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் சக்திவேல், பொறியாளர் விஜயகுமார், டி.எஸ்.பி. கல்யாணகுமார், தலைமையிட துணை தாசில்தார் பொன்னரசு நகராட்சி தலைவர் சிவகாமி, கவுன்சிலர் சேகர் ஆகியோர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், 'சாலையை குறிப்பிட்ட காலத்திற்குள் சீரமைத்து தருவதாக, எழுத்து பூர்வமாக உத்திரவாதம் அளிக்க வேண்டும்,' என, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். முதலில் மறுத்த நிலையில், போராட்டம் பிற்பகல், 2:00- மணி வரை தொடர்ந்தது.
அதனையடுத்து, 'நகராட்சி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெற்று, எஸ்டேட் நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, 2 மாதத்திற்குள் 1,900 மீட்டர் துாரமுள்ள சாலையை சீரமைத்து, 6- இடங்களில் தெருவிளக்கு பொருத்தப்படும்,' என, ஆணையாளர் உறுதியளித்தார்.
அதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டதால், காலை, 9:00 -மணி முதல், 2:00 -மணி வரை அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியே நின்றிருந்தனர்.

