/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீரோடைகளில் மனித கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசு; லாரிகளை சிறைபிடித்த மக்கள்
/
நீரோடைகளில் மனித கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசு; லாரிகளை சிறைபிடித்த மக்கள்
நீரோடைகளில் மனித கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசு; லாரிகளை சிறைபிடித்த மக்கள்
நீரோடைகளில் மனித கழிவுகளை கொட்டுவதால் குடிநீர் மாசு; லாரிகளை சிறைபிடித்த மக்கள்
ADDED : ஜன 05, 2026 05:01 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதி நீரோடைகளில், மனித கழிவுகளை தொடர்ச்சியாக கொட்டி வரும் இரு டாங்கர் லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர்.
பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், குடியிருப்புகள், ஓய்வு விடுதிகளில் இருந்து, மனித கழிவுகளை அகற்றும் பணியில், தமயந்தி மற்றும் ஜானகி ஆகிய பெயர்களில், 'செப்டிக் டாங்கர் கிளீனிங் லாரிகள்' இயங்கி வருகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளில் எந்தவித அனுமதியும் இல்லாமல், மனித கழிவுகளை வனப்பகுதிகள் மற்றும் நீரோடைகளில் கொட்டும் செயலில் இந்த லாரிகளை இயக்கும் நபர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
பலமுறை இவர்களை எச்சரித்து அனுப்பியும், கடந்த, 2024ம் ஆண்டு மக்கள் வாழும் குடியிருப்புக்கு அருகே வனப்பகுதி வழியாக செல்லும் சப்பந்தோடு ஆற்றில் கழிவுகளை கொட்டினர். தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம், 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், சேரம்பாடி அருகே, டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே, மக்கள் மற்றும் வனவிலங்குகள் பயன்படுத்தும் தண்ணீரில், உள்ளூர் நபர் ஒருவரின் ஆதரவுடன், மனித கழிவுகளை கொட்டி உள்ளனர்.
இதனை பார்த்த பகுதி மக்கள் இரண்டு டாங்கர் லாரிகளையும் பிடித்து, சேரம்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷைனி, ஊராட்சி செயலாளர் ஷோனிஜார்ஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மூலம் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கழிவுகள் கொட்டிய நீரோடை முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு, அருகே குழி தோண்டி கழிவுகள் புதைக்கப்பட்டதுடன், ஊராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு வாரத்திற்கு இந்த தண்ணீரை குடிக்கவும், குளிக்கவும் யாரும் பயன்படுத்தக் கூடாது,' என்றனர். அத்துடன் கழிவுகளை கொட்டிய தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சங்கர்,38, என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், ஊராட்சி சார்பில், 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுத்து அனுப்பப்பட்டது.

