/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் போதை போலீசை மடக்கி பிடித்த மக்கள்
/
ஊட்டியில் போதை போலீசை மடக்கி பிடித்த மக்கள்
ADDED : ஜன 30, 2024 08:59 PM

ஊட்டி:ஊட்டி நகரில் போதையில் பைக் ஓட்டி இளைஞர் மீது மோதிய போலீசை பொது மக்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பி-1 ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிபவர் ராஜ்குமார்,30. காலை வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். சீருடையில் பணியில் இருக்கும்போதே மது அருந்திவிட்டு, பிற்பகல் இருசக்கர வாகனத்தில், ஊட்டி கமர்சியல் சாலையில் இருந்து மணிகூண்டு பகுதியை நோக்கி வந்துள்ளார்.
வாகனம் மார்க்கெட் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, நடந்து சென்று கொண்டிருந்த காந்தள் பகுதியை சேர்ந்த அகில் என்ற இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவர் காயம் அடைந்தார். நண்பர்கள் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து உடனடியாக தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார். பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர் மது போதையில் இருப்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரிடம் இருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.ஐ., சுரேஷ்குமார் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடமிருந்து, போலீஸ்காரர் ராஜ்குமாரை மீட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று, ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே விபத்து நடந்த சம்பவத்தை பொதுமக்கள் 'வீடியோ மற்றும் போட்டோ' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வைரலானது. ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.