ஒரு மாதமாக குடிநீர் வினியோகத்தில் சிக்கல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ஒரு மாதமாக குடிநீர் வினியோகத்தில் சிக்கல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
ADDED : செப் 28, 2026 02:51 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திமாநகர் கிராமத்தில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லியாளம் நகராட்சியில், 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அத்திமாநகர் கிராமம் அமைந்துள்ளது. சுமார் நுாறு குடும்பங்கள் குடியிருக்கும் இந்த பகுதிக்கு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகத்தில் சிக்கல் நிலவி வந்துள்ளது.
குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருவதுடன், சாலை பராமரிப்பு பணியின் போது அகற்றப்பட்ட, குழாய்கள் சீரமைக்காமல் விடப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். கிராம மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், தீர்வு காணப்படவில்லை.
இதை தொடர்ந்து, நேற்று காலை காலி குடங்களுடன், தேவாலா-, உப்பட்டி சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உப்பட்டி-, கூடலுார் வழித்தடத்தில் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதிக்கு நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார், கவுன்சிலர் ஆலன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், ‘உடனடியாக குழாய்கள் சீரமைக்கப்பட்டு குடிநீர் முறையாக வழங்கப்படும்,’ என, உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டனர். நகராட்சி குடிநீர் பணியாளர்கள், குழாய்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
