உலக சுற்றுலா விழாவை புறக்கணித்த உயர் அதிகாரிகள்; உணவு 'கார்னிவெல்' நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் அதிருப்தி
உலக சுற்றுலா விழாவை புறக்கணித்த உயர் அதிகாரிகள்; உணவு 'கார்னிவெல்' நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் அதிருப்தி
UPDATED : செப் 29, 2026 07:25 AM
ADDED : செப் 28, 2026 04:42 PM

ஊட்டி: உலக சுற்றுலா தினத்தில், ஊட்டி பூங்கா சாலையில், பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற, உணவு 'கார்னிவெல்' துவக்க விழாவை, அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் புறக்கணித்ததால், உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சர்வதேச சுற்றுலா மையமான ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஆணடுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு கோடை காலத்தில் நடக்கும் மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சியில் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல, இரண்டாம் சீசன் சமயங்களில், செப்., மாதம், 27ம் தேதி, சுற்றுலா துறை; ஓட்டல், ரெஸ்டாரன்ட் சங்கங்கள் சார்பில் பல ஆண்டுகளாக நடக்கும் உணவு விழாவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் பங்கேற்பு இந்நிலையில், தென்னிந்திய மற்றும் நீலகிரி ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கம் சார்பில், நேற்று முன்தினம், ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உணவு திருவிழா நடந்தது. அன்று ஞாயிறு என்பதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.
அதில், பல நட்சத்திர மற்றும் உயர்தர ஓட்டல்களின், 300க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றன. இவ்விழாவில் பங்கேற்க, சுற்றுலா துறை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, சுற்றுலா அலுவலர் சங்கர் உட்பட பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கும் ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி பூங்கா சாலையோரம், 16 உணவகங்கள்; இசை மற்றும் நடன மேடை; தகவல் மையம் உட்பட பல்வேறு பணிகளுக்கு தேவையான உதவிகள்; பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், போலீசார் மேற்கொண்டனர்.
அதேவேளையில், அன்று மதியம், விழா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைக்க மாவட்ட கலெக்டர் உட்பட துறை அதிகாரிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் விழா குழுவினர் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் துவக்கி வைத்தார்.
அதன்பின், மாலையில் பூங்கா சாலையில் உள்ள ஸ்டால்களை பார்வையிட வருவாய் அலுவலர் வாசுகி மட்டும் வந்து சென்றார். இரவு, 10:00 மணிவரை, உயர் அலுவலர்கள் யாரும் வராதது, உள்ளூர் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது.
சண்டே ஹாலிடே...
ஊட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் குமார் கூறுகையில்,''ஊட்டியில் பல நட்சத்திர மற்றும் உயர்ரக ஓட்டல்கள் உள்ள நிலையில், அங்கு போய் உள்ளூர் மக்கள், அறுசுவை உணவுகளை உண்ண முடியாது. விலை மிக அதிகமாக இருக்கும். அந்த உணவுகள், 50 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பது இந்த ஒரு நிகழ்ச்சியில் தான். கடந்த பல ஆண்டுகளாக நடக்கும் இவ்விழாவில், இம்முறை தான், மாவட்ட கலெக்டர், உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை. 'சண்டே ஹாலிடே' என்பதால், உலக சுற்றுலா விழாவில் யாரும் பங்கேற்காமல் போனது வருத்தம் தான்,'' என்றார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் கூறுகையில்,'' கோவையில் சுற்றுலா துறை அமைச்சரின் நிகழ்ச்ச ி பணிகளுக்காக, இரு நாட்களுக்கு முன்பு அங்கு சென்றேன். அதனால், இவ் விழாவில் பங்கேற்க வில்லை,'' என்றார்.
