/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன்னோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: பணியர் பழங்குடியின மக்கள் பங்கேற்பு
/
முன்னோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: பணியர் பழங்குடியின மக்கள் பங்கேற்பு
முன்னோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: பணியர் பழங்குடியின மக்கள் பங்கேற்பு
முன்னோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: பணியர் பழங்குடியின மக்கள் பங்கேற்பு
ADDED : மார் 15, 2024 11:04 PM

பந்தலுார்;பந்தலுார் அருகே பொன்னானியில், மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பணியர் பழங்குடியின பெண்கள் பங்கேற்றனர்.
பந்தலுார் பகுதியில் வாழ்ந்து வரும் பணியர் சமுதாய மக்கள், மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும், 'அடியாந்திரம்' என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடத்துவது வழக்கம்.
கடந்த காலங்களில், 23 நாட்கள் விரதம் இருந்து அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தற்போது அது, 7 நாட்களாக சுருங்கி விரதம் இருக்கின்றனர். தொடர்ந்து, குறிப்பிட்ட ஒரு பழங்குடியினர் கிராமத்தை தேர்வு செய்து, அங்கு கோவிலில் பூஜை செய்து தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
பந்தலுார் அருகே, பொன்னானி அம்பலபாடி கிராமத்தில், நடந்த நிகழ்ச்சிக்கு பழங்குடியினர் சங்க நிர்வாகி குமரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்த விரதம் இருந்தவர்கள், கடந்த மூன்று நாட்களாக பகல் மற்றும் இரவில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
அவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் இதற்கான அமைக்கப்பட்ட பச்சை பந்தலில் உள்ள விளக்கை சுற்றி வந்து, முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சங்க மூத்த தலைவர்கள் மற்றும் மூத்தோர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.
அதனை தொடர்ந்து, 'தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, முன்னோர்கள் தங்களுக்கு ஆசி வழங்கி வழிநடத்தி செல்ல வேண்டும்,' என சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் விஜயன் என்பவர் சாமி ஆடி விரதம் இருந்தவர்களுக்கு ஆசி வழங்கினார்.
விரதம் இருந்தவர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மூன்று நாட்கள் பழங்குடியின மக்களின் சிறப்பு கலாச்சார நடனங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது.
இந்த நிகழ்வில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் குமரன், செங்குட்டவன், வாசு, ஜெயன், வேலன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

