/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க அளித்த மனு; இலவச வீடு கட்டும் திட்டமில்லை என பதில் கடிதத்தால் மனுதாரர் அதிர்ச்சி

ADDED : ஜூலை 01, 2025 09:44 PM

ஊட்டி; 'சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கோரி அளிக்கப்பட்ட மனுவுக்கு, வீடு கட்டி கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை,' என, பேரூராட்சி நிர்வாகம் அளித்த பதிலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே, தொட்டகொம்பை பாரதிநகர் சுற்றுவட்டார பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லை. அம்மக்கல் வனப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், சுடுகாடு வசதிக்காக இடம் ஒதுக்க கோரி, தொட்ட கொம்பை பகுதியை சேர்ந்த இந்திரகுமார் என்பவர் பொதுமக்கள் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிக்கட்டி பேரூராட்சிக்கு முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து பதில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு மேற்கொண்ட பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம் மனுதாரருக்கு பதில் கடிதம் அனுப்பியது.
அதில், 'தாங்கள் இலவச வீடு கட்டி தரக்கோரி மனு அளித்துள்ளதை தொடர்ந்து நேரடியாக விசாரித்ததில் தங்களுக்கு சொந்தமாக பட்டா இல்லை. இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டங்கள் ஏதும் பேரூராட்சியில் நடைமுறையில் இல்லை. எனவே , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தை தொடர்பு கொள்ளவும்,' என்ற பதில் கடிதம் வந்துள்ளது.
பேரூராட்சியின் இந்த பதிலால் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்த மனுதாரர் இந்திரகுமார் கூறுகையில்,''சுடுகாட்டுக்கு இடம் கேட்டு கொடுத்த மனுவுக்கு, வீடும் கட்டும் திட்டம் எதுவும் இல்லை என்று பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
இதிலிருந்து பேரூராட்சியில் பணிகள் எந்த அளவுக்கு நடக்கிறது என்று நன்றாக தெரிகிறது. இது குறித்து மீண்டும் முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்க உள்ளேன்,'' என்றார்