‘பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் புழக்கம்’: சோதனை பணி ‘ தொய்வு’
‘பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் புழக்கம்’: சோதனை பணி ‘ தொய்வு’
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 01:22 PM

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், ஒரு லிட்டர் முதல், 4 லிட்டர் வரையிலான குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. விதி மீறி கொண்டுவரப்பட்டால் பொதுமக்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. விற்பனை செய்யும் கடைகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ‘ சீல் ’ வைக்கப்படுகிறது.
வெளி மாவட்டத்திலிருந்து வரும் சுற்றுலா பயணியர் நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவுறுத்துவுடன் , அப்படி மறைத்து கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை எல்லையோர சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால் , அரசு பஸ் , சுற்றுலா வாகனங்களில் மறைத்து கொண்டு வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சோதனை சாவடிகளில் முறையாக சோதனை செய்யாததால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் ஆங்காங்கே வீசி எறியப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களை பார்த்தாலே தெரிகிறது. மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.என, சுற்றுசூழல் அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் , ‘‘ நகராட்சி சார்பில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரப்பட்டால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பணியாளர்கள் நியமித்து ஆய்வுப் பணியை தீவிரப்படுத்துகிறோம்.’’ என்றார்.
