தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவு குடிநீர் மாசுபடும் அபாயம்
தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவு குடிநீர் மாசுபடும் அபாயம்
ADDED : செப் 22, 2026 12:21 PM

கூடலுார்: கூடலுார் இரும்புபாலம் அருகே, தடுப்பணையில் தேங்கும் குப்பைகளால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார் இரும்புபாலம் பகுதியில், நகராட்சியின், 2-வது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்காக, ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைத்து, அதிலிருந்து தண்ணீரை கிணற்றுக்கு எடுத்து சென்று, அதனை சுத்திகரித்து குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்., மாதம், அங்குள்ள மரம் சாய்ந்து தடுப்பணை குறுக்கே விழுந்தது. இதுவரை அதனை அகற்றவில்லை. இதனால், ஆற்று நீரில் வரும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மரத்தை ஒட்டி தேங்கியுள்ளதால் தடுப்பணை நீர் மாசுபடும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க தடுப்பணையில் கிடக்கும் மரம் மற்றும் குப்பைகள அகற்ற வேண்டும்.
கூடலுார் நகராட்சி பொறியாளர் தியாகராஜன் கூறுகையில், ‘‘தடுப்பனையிலிருந்து, கிணற்றுக்கு எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், தடுப்பணையை ஆய்வு செய்து அதில் கிடக்கும் மரம் மற்றும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றப்படும்,’’ என்றார்.
