/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இத்தலார் கிராமத்தில் மதுவுக்கு எதிராக உறுதிமொழி
/
இத்தலார் கிராமத்தில் மதுவுக்கு எதிராக உறுதிமொழி
ADDED : ஏப் 02, 2025 10:12 PM

ஊட்டி; ஊட்டி அருகே இத்தலார் கிராமத்தில் இளைஞர்கள், ஊர் மக்கள் மது அருந்துவதை தவிர்த்து உறுதிமொழி எடுத்தனர்.
நீலகிரியில், 350 க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுக சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருவிழா,திருமணம், சீர், பிறப்பு மற்றும் இறப்பு என சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பலர் மது அருந்துவது வழக்கம். இதனால், பொருளாதார சீரழிவதுடன், குடும்பங்களில் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு, படுக சமுதாய அமைப்புகள் பல்வேறு முன்னெடுப்பு களை எடுத்து வருகின்றன.
அதன்படி, அனைத்து கிராமங்களிலும் 'மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்,'என, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் மதுவுக்கு எதிராக கோஷம் எழுந்துள்ளது.
கிராம இளைஞர்கள் உட்பட ஊர் மக்கள் ஒன்றிணைந்து, 'இனிமேல் கிராமத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் மது அருந்தக்கூடாது,'
என, உறுதிமொழி எடுத்து, கிராம எல்லையில் தகவல் பலகை வைத்துள்ளனர். கிராம மக்களின் இந்த முடிவு, பல தரப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

