/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் காவல்துறை சார்பில் சமுதாய கூடம் திறப்பு
/
பள்ளியில் காவல்துறை சார்பில் சமுதாய கூடம் திறப்பு
ADDED : ஜூலை 22, 2025 09:31 PM
கோத்தகிரி; கோத்தகிரி குஞ்சப்பனை ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்கள் நலன் கருதி, காவல்துறை சார்பில், சமுதாய கூடம் திறப்பு விழா நடந்தது.
குன்னுார் உட்கோட்டம், கோத்தகிரி காவல் எல்லைக்கு உட்பட்ட, குஞ்சப்பனை ஜி.டி.ஆர்., பள்ளியில், 6ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வரை, 200 பழங்குடியின மாணவர்கள் உட்பட, 230 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர்களில், 105 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் தங்கும் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
குஞ்சப்பனை கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஏதுவாக, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 'மாடர்னிசேஷன் ஆப் போலீஸ் போர்ஸ்' திட்டத்தின் மூலம், சமுதாய மையம் உருவாக்க, இப்பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளன.
தொடர்ந்து, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் மூலமாக, பள்ளி வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், எழுது பொருட்கள், கம்ப்யூட்டர்கள், புரொஜெக்டர்கள், ஜெராக்ஸ் மெஷின் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும், மாணவர்கள் கல்வியில் சாதிக்கும் வகையில் பயிற்சி அளிக்க, நான்கு பயிற்றுனர்கள் நியமிக்கப்பட்டனர். அனைத்து வசதிகளையும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று சமுதாயக்கூடம் திறக்கப்பட்டது.
மாவட்ட எஸ்.பி., நிஷா சிறப்பு விருந்தினராக பங் கேற்று சமுதாய கூட்டத்தை திறந்து வைத்து, 'மாணவர்கள் இந்த கூடத்தை பயன்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயின்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்,' என்றார்.
குன்னுார் டி.எஸ்.பி., ரவி, கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், எஸ்.ஐ.,கள் யுவராஜ் மற்றும் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.