ADDED : பிப் 25, 2024 10:44 PM

சூலுார்;சூலுாரில் பிரதமரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை போலீசார் அகற்றியதால் பா.ஜ., வினர் ஆவேசமடைந்தனர்
பல்லடத்தில், 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நாளை நடக்கிறது. அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேச உள்ளார்.
இதற்காக, பிரதமர் மற்றும் நிர்வாகிகளை வரவேற்கும் வகையில் பா.ஜ., வினர் சூலுார், காடாம்பாடி பிரிவு, பாப்பம்பட்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம், காடாம்பாடி பிரிவில் இருந்த பிளக்ஸ் பேனர்களை போலீசார் அகற்றினர். இதையறிந்து அங்கு சூலுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிசாமி மற்றும் தொண்டர்கள் திரண்டனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் உரிய அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளோம். ஆனாலும், போலீசார் பிளக்ஸ் பேனர்களை கிழித்து அகற்றியுள்ளனர்,' என்றனர்.
அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற நிர்வாகிகள், எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் முறையிட்டனர். அதன்பின்,போலீசார் அனுமதி வழங்கியதால், பா.ஜ., வினர் பேனர்கள் வைக்க துவங்கினர்.

