/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'போஸ்ட் மென்' சீருடை அணியாவிட்டால் பணிநீக்கம்; அன்றைய 'பிரிட்டீஷ்' தபால் சேவையில் நடவடிக்கை
/
'போஸ்ட் மென்' சீருடை அணியாவிட்டால் பணிநீக்கம்; அன்றைய 'பிரிட்டீஷ்' தபால் சேவையில் நடவடிக்கை
'போஸ்ட் மென்' சீருடை அணியாவிட்டால் பணிநீக்கம்; அன்றைய 'பிரிட்டீஷ்' தபால் சேவையில் நடவடிக்கை
'போஸ்ட் மென்' சீருடை அணியாவிட்டால் பணிநீக்கம்; அன்றைய 'பிரிட்டீஷ்' தபால் சேவையில் நடவடிக்கை
ADDED : அக் 09, 2025 11:50 PM

குன்னுார்: 'கடந்த, 1884ல், லவ்டேல் தபால்காரர் முறையாக சீருடை அணியாமல் இருந்ததால் அபராதம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,' என, பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக், 9ம் தேதி உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டில் அக்., 9 முதல் 13 வரை தேசிய தபால் வார விழா கொண்டாப்பட்டு வருகிறது.
மலை மாவட்டமான நீலகிரியில், தபால் சேவை என்பது பல்வேறு சிரமங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஊட்டிக்கு அடுத்த படியாக, 1855ல், துவக்கப்பட்ட வெலிங்டன் தபால் நிலையம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்பட்டது.
ராணுவ பகுதியாக உள்ள இங்கு ராணுவ கடிதங்கள் கொண்டு வந்து கொடுக்கும் பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்னல் ஓச்சர்லோனி என்பவர் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் தபால் அலுவலகங்கள் பற்றியும், அதன் வருவாய் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதிக தபால்கள் மற்றும் அதிக வருவாய் ஈட்டி வெலிங்டன் தபால் அலுவலகம் சாதனை படைத்துள்ளது.
'ஆர்டர்' புக்கில் அரிய தகவல் ஓய்வு பெற்ற, தபால் அலுவலர் (தேசிய விருது) ஹரிஹரன் கூறியதாவது: நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் 'ஆர்டர் புக்' எனப்படும் ஆய்வு புத்தகம் வைக்கப்படுகிறது.
ஊட்டி தபால் அலுவலகத்தில் முதல் புத்தகம், 1867 பிப்., 14ல், 12 அனாவிற்கு (பைசா) வாங்கப்பட்டுள்ளது. முதல் குறிப்பில், தபால் அதிகாரி முதல், 3 குமாஸ்தாக்கள் பணிகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. 1869ல் ஜூன் 7ல், தபால் அலுவலர் குமாஸ்தாவிடம், ஒரு தச்சனை அமர்த்தி நாற்காலி, மேஜைகளை பராமரிக்கவும், இல்லையெனில் பணிநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே ஆண்டு நவ., 8ல், பராமரிக்காத இரு குமாஸ்தாக்களுக்கு, ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளார். கடந்த 1877ல் தபால் அதிகாரி, காலை, 6:00 மணி முதல் 9:00 மணி வரையும், பகலில் ஐந்து மணி வரையும் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
1884ல், லவ்டேல் தபால்காரர் முறையாக சீருடை அணியாமல் இருந்ததால் அபராதம் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்டர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு பல அலுவலகங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது, ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய துறை, நமது நாட்டில் தபால் துறையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.