/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடியில் இறந்த புலிக்கு பிரேத பரிசோதனை
/
மசினகுடியில் இறந்த புலிக்கு பிரேத பரிசோதனை
ADDED : ஆக 25, 2025 09:08 PM
கூடலுார்; முதுமலை, மசினகுடி வன கோட்டம், சிங்கார வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்குவாரியை ஒட்டி, வயது முதிர்ந்த பெண் புலி, நடக்கவும், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தது. வனத்துறையினர், அதனை, 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை புலி உயிரிழந்தது. அதன் உடலை, முதுமலை துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தனபால், தமிழ்நாடு வனகுற்ற தடுப்பு பிரிவு வனச்சரகர் முருகன், வனவர் சங்கர் ஆகியோர் முன்னிலையில், முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மசினகுடி அரசு கால்நடை டாக்டர் இந்துஜா ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் புலிக்கு, 12 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக, பற்கள் தேய்ந்துள்ளது. உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. உடலில் மற்றொரு புலி தாக்கிய காயமும் உள்ளது. வேட்டையாடும் தன்மை இழந்து, உணவு உட்கொள்ள முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளது. ஆய்வுக்காக உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது,'என்றனர்.