/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை நர்சரியில் சோலை மர நாற்றுகள் உற்பத்தி
/
வனத்துறை நர்சரியில் சோலை மர நாற்றுகள் உற்பத்தி
ADDED : நவ 18, 2025 02:42 AM

கோத்தகிரி: கோத்தகிரி வனத்துறை நர்சரியில் சோலைமர நாற்றுகள் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட, ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கீழ் கோத்தகிரி, கட்டபெட்டு, குந்தா மற்றும் கூடலுார் உட்பட, பல்வேறு வனச்சரங்ககளில், சோலை மர நாற்றுகள் உற்பத்தி செய்ய, நர்சரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வனவளம் மேம்பாடு திட்டத்தின் கீழ், விக்கி, நாவல், கோலி, நெல்லி, நிலா, ரெட் கொய்னா, இலங்கம் மற்றும் நாய் தேக்கு உள்ளிட்ட சோலை மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தவிர, 'கிரிஸோபோகோன், திமிடா டிரிமுலா, ஆன்ரோபோகோன் லிவிடஸ், டிரிபோகோன் புரோமைடஸ் மற்றும் சிம்போபோகோன் பிளக்சோசஸ்,' போன்ற புல் வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும், சோலை மரங்கள் மற்றும் புல் வகைகள், வனப்பகுதியில் நடவு செய்யப்பட்டு வன பரப்பையும் அடர்த்தியையும் அதிகரிக்க செய்ய ஏதுவாக, வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்காக, பெரும்பாலான காப்பு காடுகளில் தண்ணீரை அதிகம் உறிஞ்சும் கற்பூரம் மற்றும் சீகை போன்ற மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
மரங்கள் அகற்றப்பட்ட காப்பு காடுகளில், சோலை மரங்கள் நடவு செய்யும் பொருட்டு, நாற்றுகள் தயாரிக்கும் பணி தற்போது, தீவிரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி ரேஞ்சர் செல்வராஜ் கூறுகையில், ''கோத்தகிரி லாங்க் வுட் சோலை நர்சரியில், மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தல் படி, 'தமிழ்நாடு உயிர் பன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டம்' வாயிலாக, சோலை மரங்கள் மற்றும் புல்வகைகளை உருவாக்கி, வனப்பகுதியில், நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

