'சதுப்பு நிலங்கள் அழிப்பால் பாழாகும் துாய்மை' :கட்டுமானங்களை தடுத்து நீராதாரத்தை பாதுகாக்கணும்
'சதுப்பு நிலங்கள் அழிப்பால் பாழாகும் துாய்மை' :கட்டுமானங்களை தடுத்து நீராதாரத்தை பாதுகாக்கணும்
UPDATED : ஆக 26, 2026 03:45 PM
ADDED : ஆக 26, 2026 03:10 PM
குன்னூர்:குன்னூர் பெரிய வண்டிச்சோலை பகுதியில் சதுப்பு நிலங்களில் நடக்கும் கட்டுமானங்களை தடுத்து நீர் ஆதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மலையின் உயிரோட்டமாகவும், பவானி ஆற்றின் பிரதான நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்கும் இயற்கை சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் அதிகரித்து வருகிறது.
இயற்கையின் வடிகால்களான சதுப்பு நிலங்களில் கழிவுகள் கலக்கப்படும்போது, அவை நிலத்தடி நீரை நஞ்சாக்குவதோடு மட்டுமல்லாமல் சமவெளியில் பாயும் பவானி ஆற்றின் தூய்மையை அடியோடு பாழாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சூழலில், குன்னூர் பெரிய வண்டிச்சோலை மற்றும் ஸ்பிரிங்பீல்டு பகுதி மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரமாக விளங்கும் உப்பு தொட்டி நீரூற்று மற்றும் சதுப்பு நில பகுதியில் கட்டுமானங்கள் நடந்து வருவதால் சதுப்பு நிலம் பாதிக்கும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பிய பெரிய வண்டிச்சோலை சமூக ஆர்வலர் ஜெயக்குமார், கூறுகையில், இயற்கை நீரூற்று மற்றும் சதுப்பு நிலத்தை பாழ்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானங்களை தடுத்து நிறுத்த வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, உப்பு தொட்டி நீரூற்று பகுதியை தூர்வாரி, மக்களின் பயன்பாட்டிற்கு தர வேண்டும். கட்டுமான பணிகள் நிறைவு பெற்றால், ஊற்றுநீரில் மனித கழிவு கலந்து நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும், என்றார்.
