/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரமில்லாத சாலை பணியை கண்டித்து -மறியல்; இரு மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
/
தரமில்லாத சாலை பணியை கண்டித்து -மறியல்; இரு மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
தரமில்லாத சாலை பணியை கண்டித்து -மறியல்; இரு மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
தரமில்லாத சாலை பணியை கண்டித்து -மறியல்; இரு மாநில எல்லையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 29, 2026 05:46 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே புஞ்சை வயல் சாலை சீரமைப்பு பணியில் நடக்கும் குளறுபடிகளை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தால், இரு மாநில எல்லையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பந்தலுார் நெல்லியாளம் நகராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புஞ்சைவயல் கிராமம் உள்ளது. இதன் வழியாக கேரளா மட்டுமல்லாமல், உள்ளூரில் உப்பட்டி, அத்திக்குன்னா, நெல்லியாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் அரசு சுகாதார நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு நடுநிலைப்பள்ளி, அங்கன்வாடி உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. பஜார் பகுதியில் இருந்து கிராமத்திற்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில், ஆட்டோ பயணம் அல்லது நடந்து செல்ல வேண்டும்.
சேதமான சாலையால் பாதிப்பு இந்நிலையில், உப்பட்டியில் இருந்து, புஞ்சைவயல் செல்லும் சாலை மோசமான நிலையில் சேதமடைந்து, குழிகளாக மாறி உள்ளதுடன், சாலையின் குறுக்கே உள்ள பாலமும் பலமிழந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க மக்கள் வலியுறுத்திய நிலையில், புஞ்சைவயல் மற்றும் மேங்கோரேஞ்ச் ஆகிய சாலைகளை சீரமைக்க, 1.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதனை டெண்டர் விடுவதற்கு முன்பே சாலை பணிகள் அவசர கதியில் துவக்கப்பட்டன.
சேதமான சாலையில் மழையால் நிறைந்துள்ள மண்ணை அகற்றாமல், அதன் மீது பாறை துகளை துாவி ஜல்லி கற்களை கொட்டி சென்றதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீரமைத்து நல்ல நிலையில் உள்ள, சாலையை மீண்டும் சீரமைக்கும் பணியும் நேற்று நடந்தது.
அதிருப்தி அடைந்த மக்கள் இதனால், அதிருப்தி அடைந்த மக்கள், டெண்டர் விட்டு சேதமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி, இருமாநில சாலையில் காலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காலை, 6:30 மணிக்கு தார் கலவைகளுடன் வந்த லாரிகள், திருப்பி அனுப்பப்பட்டன. தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகள் அங்கு வராத நிலையில் போராட்டம், 9:30 மணி வரை தொடர்ந்தது. பள்ளி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், தமிழக-கேரளா சாலையில், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தொடர்ந்து, நகராட்சி மேலாளர் சுகுமார், கவுன்சிலர் முரளி, வருவாய்த்துறையினர் மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'சேதமான சாலையில் கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் பாறை துகள்களை அகற்றி, முதலில் அந்த பகுதியை முதலில் சீரமைக்கவும், பாலம் கட்டுமான பணி குறித்து நிதி ஒதுக்கீடு செய்து பணி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

