/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செயல்படாத மலை ரயில்; கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு
/
செயல்படாத மலை ரயில்; கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு
செயல்படாத மலை ரயில்; கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு
செயல்படாத மலை ரயில்; கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு
ADDED : டிச 17, 2024 09:42 PM
குன்னுார்; நீலகிரி மலை ரயிலுக்கான கூட்டு ஆலோசனை குழு செயல்படாமல் உள்ளதாக கூறி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுாற்றாண்டுகள் கடந்து இயங்கும், சிறப்பு பெற்ற நீலகிரி மலை ரயிலுக்கு, 2005ல் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது. கடந்த, 2023ல், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ஊட்டி ரயில் நிலையத்திற்கு, 7 கோடி ரூபாய்; குன்னுார் ரயில் நிலையத்திற்கு, 6.7 கோடி ரூபாய்; மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு, 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த, 2 மாதத்திற்கு முன்பு, நீலகிரி மலை ரயிலுக்கான கூட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களை, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தேர்வு செய்தனர். அதில், நீலகிரி ஆவண மைய கவுரவ தலைவர் தர்மலிங்கம் வேணுகோபால், தோடர் பழங்குடியின பெண் வாசமல்லி; நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம்; முதுமலை புலிகள் காப்பக முன்னாள் கள இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உறுப்பினர் தர்மலிங்கம் வேணுகோபால், தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, சேலம் கோட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார்.
அவர் கூறுகையில்,' மத்திய அரசின் நிதியில் நடக்கும், ரயில் நிலைய புனரமைப்பு பணியில், பாரம்பரியம் மாறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூறிய ஆலோசனைகள் ஏற்கப்படவில்லை; மேலும், உறுப்பினர் பதவி வழங்கி, 2 மாதங்கள் கடந்தும், ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால், ராஜினாமா செய்தேன்,' என்றார்.