/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிலுவை தொகையை தாமதப்படுத்தினால் சிறை நிரப்பும் போராட்டம்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
/
நிலுவை தொகையை தாமதப்படுத்தினால் சிறை நிரப்பும் போராட்டம்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நிலுவை தொகையை தாமதப்படுத்தினால் சிறை நிரப்பும் போராட்டம்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நிலுவை தொகையை தாமதப்படுத்தினால் சிறை நிரப்பும் போராட்டம்: அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
ADDED : டிச 19, 2024 11:25 PM

ஊட்டி; 'பசுந்தேயிலைக்கான நிலுவை தொகையை வழங்குவதில் கால தாமதப்படுத்தினால் சிறை நிரப்பு போராட்டம் நடத்தப்படும்,' என, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 30 ரூபாய் வழங்க கோரி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து, விவசாயிகளும் பல்வேறு அமைப்பினருடன் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விலை நிர்ணய கமிட்டி
இதற்கிடையே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட கலெக்டர் தலைமையில் விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், தேயிலை வாரிய செயல் இயக்குனர், விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 'விலை நிர்ணய கமிட்டி மூலம், குன்னுார் தேயிலை வாரியம் மாதந்தோறும் அறிவிக்கும் தேயிலைக்கான விலையை, சில கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் முறையாக வழங்குவதில்லை,' என, தொழிற்சாலை உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் தலைமையில், அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.,-நா.த.க., -வி.சி.க., -சி.பி.எம்., -சி.பி.ஐ.,-தே.மு.தி.க.,- த.வெ.க., உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது.
கூட்டத்துக்கு பின், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் நிருபர்களிடம் கூறுகையில், ''கடந்த அக் ., மாதத்தில் பசுந்தேயிலை கிலோவுக்கு, 24.50 ரூபாய் வழங்ப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 8 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கிலோவுக்கு, 21 ரூபாய் நிர்ணயம் செய்து உறுப்பினர்களுக்கு தொகை வழங்கியுள்ளனர்.
அந்த மாதத்திற்கான, 1.60 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்க கோரி உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இம்மாதம், 22ம் தேதிக்குள் அத்தொகையை அரசு வழங்க வேண்டும். காலதாமதம் செய்யும் பட்சத்தில் அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.