/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
ADDED : அக் 30, 2025 10:43 PM

பந்தலூர் அக்.31-:  பந்தலூர் அருகே பாட்ட வயல் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தூரிகை அறக்கட்டளை சார்பில் இலவசமாக எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் வாசுகி தலைமை வகித்து பேசுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு மூலம் பல்வேறு சலுகைகள் மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தரமான கல்வி, அனைத்து வசதிகள் மற்றும் சிறப்பான கட்டட வசதி போன்றவற்றால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் இதுபோன்ற தன்னார்வலர்கள் மூலம், மாணவர்களின் கல்வியை மேலும் ஊக்குவிக்க, இது போன்ற கல்வி உபகரணங்கள் வழங்குவது பாராட்டுக்குரியது என்றார்.
தூரிகை அறக்கட்டளை இயக்குனர் ரஞ்சித் பேசுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தினசரி வருகையை அதிகரிப்பது மற்றும் படிப்பதில் ஆர்வம் காட்டுவதை, அதிகரிக்க செய்வதற்காக இது போன்ற கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
எனவே மாணவர்கள் தினசரி பள்ளி வருகை மற்றும் ஒழுக்கம், கல்வி கற்றலில் மேம்பாடு அடைய ஆசிரியர்களுடன், பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி மற்றும் வட்டார கல்வி அலுவலர் வாசுகி ஆகியோர் மாணவர்களுக்கு எழுதுபொருட்களை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான எழுதுபொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாகி சினேகா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

