பசுந்தேயிலைக்கான 'செட்டில்மென்ட்' தொகை வழங்குவதில் இழுத்தடிப்பு!பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிறு விவசாயிகள்
பசுந்தேயிலைக்கான 'செட்டில்மென்ட்' தொகை வழங்குவதில் இழுத்தடிப்பு!பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சிறு விவசாயிகள்
UPDATED : ஜூலை 29, 2026 04:44 PM
ADDED : ஜூலை 29, 2026 04:41 PM

ஊட்டி: நீலகிரியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், பசுந்தேயிலைக்கான 'செட்டில் மென்ட்' தொகை வழங்க தாமதப்படுத்துவதால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் 'இன்கோசர்வ்' கட்டுப்பாட்டின் கீழ், 'கிண்ணக்கொரை, மஞ்சூர், எடக்காடு, மகாலிங்கா, மேற்குநாடு, எப்பநாடு, கைக்காட்டி, கரும்பாலம், கட்டபெட்டு, பிதர்காடு,' உள்ளிட்ட, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் உள்ள, 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களது தோட்டத்தில் அறுவடை செய்யும் பசுந்தேயிலையை, அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். வினியோகிக்கும் பசுந்தேயிலையை கணக்கிட்டு முன்பணம் வழங்கப்படுகிறது.
நெருக்கடியில் உறுப்பினர்கள் விலை நிர்ணயத்திற்கு பின், மீதி தொகைக்கான 'செட்டில்மென்ட்' தொகையை பெரும்பாலான தொழிற்சாலை நிர்வாகம் முறையாக வழங்கப்படாமல் மாதக்கணக்கில் இழுத்தடித்து வருவதால், தொழிற்சாலை உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
குறிப்பாக, கிண்ணக்கொரை, மேற்குநாடு, இத்தலார், எப்பநாடு, மகாலிங்கா உள்ளிட்ட கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகங்கள் செலவினங்களை தாக்கு பிடிக்க முடியாத காரணத்தால், நிலுவை தொகைகளை மாத கணக்கில் இழுத்தடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரூ.1.5 கோடி நிலுவை உறுப்பினர்கள் கூறுகையில்,'தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகிறோம். பசுந்தேயிலைக்கான செட்டில்மென்ட் நிலுவை தொகை அந்தந்த மாதத்தில் கணக்கு முடித்து வழங்காமல் தொழிற்சாலை நிர்வாகங்கள் இழுத்தடிக்கின்றன.1.5 கோடி ரூபாய்க்கு மேலாக நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது.
உறுப்பினர்கள் பல முறை தொழிற்சாலை நிர்வாகத்திடம் சென்று கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறோம். குன்னுார் இன்கோசர்வ் நிர்வாகம் உறுப்பினர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
