/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'குவாண்டம்' அறிவியல்: தொழில் நுட்ப கருத்தரங்கு
/
'குவாண்டம்' அறிவியல்: தொழில் நுட்ப கருத்தரங்கு
ADDED : பிப் 20, 2025 09:55 PM
கோத்தகிரி ; கோத்தகிரி துானேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், 'உலக குவாண்டம் அறிவியல்' மற்றும் தொழில்நுட்ப ஆண்டு சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை பார்வதி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
ஐக்கிய நாடுகள் சபை, நடப்பு ஆண்டை, உலக குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. குவாண்டம் இயற்பியல் கண்டுபிடிக்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பூமி மற்றும் கோள்கள் சூரியனை சுற்றி வருவது, அதேபோல பேரண்டங்கள் அனைத்திலும் உள்ள ஈர்ப்பு விசைகள் செயல்படும் விதம் 'கிளாசிக்கல் இயற்பியல்' என, கூறப்படுகிறது. இதனை நியூட்டன் விதிகள் விளக்குகின்றன.
குவாண்டம் அறிவியல்
ஆனால், ஒரு அணுவிற்குள் உள்ள அணு துகள்கள், நியூட்டனின் இயற்பியல் விதிக்கு கட்டுப்படுவதில்லை. அவை, வேறு இயற்பியல் விதியில் இயங்குகின்றன. இதனை தான், 'குவாண்டம் இயற்பியல்,' என, அழைக்கின்றனர். இந்த குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் தான், இன்றைய நவீன அறிவியல் துறைகளான செயற்கை நுண்ணறிவு குவாண்டம், கம்ப்யூட்டர் போன்ற பல தொழில்நுட்பங்கள் இயங்குகின்றன. 'இந்த அறிவிப்பின் மூலம், ஒரு புதிய அறிவியல் யுகம் தொடங்குகிறது,' என, ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், காலநிலை மாற்றத்தை துல்லியமாக கணக்கிடுதல் போன்ற செயல்பாடுகள் நடைபெற உள்ளன.
இன்றைய கம்ப்யூட்டர்கள், 2000 ஆண்டுகள் எடுத்து கொள்ளும் ஒரு கணக்கீட்டு பணிகளை, குவாண்டம் கம்ப்யூட்டர் அசுர வேகத்தில் சில வினாடிகள் செய்து முடிக்கிறது. தற்போது, கூகுள் நிறுவனம் வைத்துள்ள குவாண்டம், கம்ப்யூட்டர் உலகில், 146 நாடுகளின் அரசுகளையும், பெரிய கம்பெனிகளையும் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் செயல் தலைவர் தமிழகத்தை சேர்ந்த, சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
குவாண்டம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 'சைபர் கிரைம்'களை முற்றிலும் ஒழிக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தை அறிந்து, தங்களது வருங்காலத்தை மாணவர்கள் திட்டமிட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.