ADDED : செப் 26, 2026 03:52 AM

கூடலுார்: கூடலுாரில் நிலவிய வறட்சியான காலநிலையால், நெல் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், இரு நாட்களாக தொடரும் மழையால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் ஜூன்மாதம் துவங்கும் பருவமழை, நவ., வரை தொடருவது வழக்கம். இந்த காலகட்டத்தில் நெல் விவசாயம் நடக்கிறது. நடப்பு ஆண்டு, 'எல் நினோ' பாதிப்பு காரணமாக, எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. முக்கிய நீர் ஆதாரமான பாண்டியார் - புன்னம்புழா, மாயார் மற்றும் அதன் கிளை ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து குறைந்து, பல பகுதிகளில் நெல் விவசாயத்தை கைவிட்டனர். எனினும், குணில், புத்லுார்வயல் உள்ளிட்ட சில பகுதிகளில், மழையை நம்பி நெல் விவசாயம் நடந்தது. கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வறட்சியான காலநிலை ஏற்பட்டது. வயல்களின் வெடிப்பும் ஏற்பட்டது. நெற்பயிர்கள் பாதித்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு துவங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெப்பம் தணிந்து நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றும், மழை தொடர்ந்ததால் நெல் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
விவசாயி நாராயணன் கூறுகையில், ''கூடலுாரில் பருவமழையை நம்பி நெல் விவசாயம் செய்து வருகிறோம். நடப்பு ஆண்டு, பருவமழை ஏமாற்றியதால், நெற்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் மழை நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. மழை தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம்,'' என்றார்.
