/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வெள்ளம் புகுந்த பள்ளி; வகுப்பு அறையாக மாறிய வீடு
/
மழை வெள்ளம் புகுந்த பள்ளி; வகுப்பு அறையாக மாறிய வீடு
மழை வெள்ளம் புகுந்த பள்ளி; வகுப்பு அறையாக மாறிய வீடு
மழை வெள்ளம் புகுந்த பள்ளி; வகுப்பு அறையாக மாறிய வீடு
ADDED : நவ 06, 2024 09:26 PM

குன்னுார் ; குன்னுார் பர்லியாரில் மழை வெள்ளம் புகுந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வகுப்புகள் நடத்த முடியாததால், அருகில் உள்ளவரின் வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதிகளில் தோண்டப்பட்ட இடங்களில் இருந்த மண், கற்கள் மூன்று நாட்களுக்கு முன், மழை நீரில் அடித்து செல்லப்பட்டு, பர்லியார் ஊராட்சி பள்ளி வகுப்பறையில் புகுந்தது. சேறு, சகதி அகற்றும் பணி நிறைவு பெறவில்லை.
இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன்தினம் பாடங்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குன்னுார் வட்டார கல்வி அலுவலர் யசோதா தலைமையில் மாற்று இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பள்ளி அருகில் உள்ள ரெஹமத் என்பவர், தனது வீட்டின் அறையில் பாடம் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து, தலைமையாசிரியை கலைவாணி, ஆசிரியை உஷாகுமாரி ஆகியோர் வீட்டில் பாடங்களை நடத்தினர்.
சத்துணவு பணியாளர் டெய்சிராணி அந்த வீட்டில் சமைத்து மதிய உணவு வழங்கினார். மாவட்டத்தில், முதல் முறையாக வீட்டில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டதால், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.
குன்னுார் வட்டார கல்வி அலுவலர் யசோதா கூறுகையில், ''பள்ளியில், 15 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இன்று (நேற்று) 10 மாணவர்கள் மட்டுமே வந்தனர்.
மரக்கிளைகள், சேறு அகற்றும் பணி நடந்து வருவதால், வகுப்பு எடுக்க முடியவில்லை. ரெஹமத் என்பவர் தனது வீட்டில் வகுப்பு எடுக்க அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம்,'' என்றார்.