/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் வீணாகும் மழைநீர்: கோடையில் மக்கள் கண்ணீர்
/
மலையில் வீணாகும் மழைநீர்: கோடையில் மக்கள் கண்ணீர்
ADDED : ஜூலை 23, 2025 08:36 PM

நீலகிரி மாவட்டம், 2,549 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது. இங்குள்ள, 60 சதவீதம் வனப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் பெரும்பாலும், மலை பகுதிகளின் வழியாக தமிழகத்தின் பவானி மற்றும் கேரள பகுதிகளுக்கு செல்கின்றன.
இந்த நீரை குடிநீர், விவசாயம், மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் வகையில், மாவட்டத்தில், 13 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதை தவிர, வன உயிரினங்கள், விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும், நுாற்றுக்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டு, குளம், குட்டைகளில் தண்ணீரை தேக்கி பயன்படுத்தப்படுகிறது.
நீர்பாசன வசதிக்கான பணிகள் குறிப்பாக, வேளாண் பொறியியல் துறையினர், ஆறுகள் மற்றும் ஓடைகளை அடையாளம் கண்டு அதன் குறுக்கே தண்ணீர் சேமித்து வைக்க சிறிய தடுப்பணைகளை கட்டி வருகின்றனர்.
இதனால், இந்த தடுப்பணை அருகாமையில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்வதால் விவசாயத்துக்கு பயன்படுகிறது. இதை தவிர, வனத்துறை சார்பில், வனத்தின் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில், 6 தாலுகாவில் கடந்த நான்கு ஆண்டு காலம் கட்டி முடிக்கப்பட்ட பல தடுப்பணைகள் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் மழை நீர் சேமிக்கப்படாமல், சமவெளிக்கு செல்கின்றன. இதனால், கோடை காலங்களில், மக்கள், விவசாயிகள், வன உயிரினங்கள் தண்ணீருக்கு தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை இந்நிலையில், நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில், 2001- 2006 அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேமிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில், அரசு, தனியார் கட்டடங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இத்திட்டம், செயல்படுத்தப்பட்டதால் நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்தது.
அதற்கு பின் வந்த ஆட்சியாளர்கள், மழைநீர் சேமிப்பு திட்டத்தை கிடப்பில் போடப்பட்டதால், அந்த திட்டம் செயல் இழந்தது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை காண்பது அரிதாக உள்ளது. அரசு அலுவலகங்களில் ஏற்கனவே, அமைக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு அமைப்புகளும் பராமரிக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.
மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு அவசியம் கோடை காலங்களில், அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடால் வனவிலங்குகள் குடியிருப்பை நோக்கி வருவது அதிகரித்து, மனித- வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க, வனப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகளை துார் வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்.
மேலும், கோடை காலத்தில் விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வும் தடுப்பணைகள் அவசியம். இதனை கருத்தில் கொண்டு, மலை மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு அலுவலகங்கள், வீடுகள் மட்டுமின்றி தேயிலை, காபி தோட்டங்களிலும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டங்களில் சிறு கால்வாய்கள் அமைத்து மழைநீர் சேமிக்க வேண்டும். அதில், தேங்கும் நீரை வறட்சி காலங்களில் பயன்படுத்த முடியும். இதற்கான, விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில், ''நீலகிரியில், 6 தாலுகாவை உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த, 4 ஆண்டுகளில், 20 தடுப்பணைகள் வேளாண் பொறியியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ளது. இதை தவிர, பல தடுப்பணைகள் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது, கோத்தகிரி நெடுகுளா பகுதியில், 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. பல இடங்களில் மழையால் ஏற்படும் மண்ணரிப்பு காரணமாக, தடுப்பணைகளில் மண் அதிகரித்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சகதிகளை முழுமையாக அகற்ற நிதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் படிப்படியாக தடுப்பணைகள் துார்வாரப்படும்,'' என்றார்.
அரசு கட்டடங்களில்
மழைநீர் சேகரிப்பு அவசியம்
அரசு அலுவலகங்கள் பெரிய கட்டடங்களாக இருப்பதால், மழைநீரை சேமிப்பதன் வாயிலாக அதிக அளவு தண்ணீரை சேமிக்க முடியும். இது ஒரு முன்மாதிரியாக மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் உதவும். ஊட்டி பழைய கலெக்டர் அலுவலகம், கூடுதல் கலெக்டர் அலுவலகம், குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள், பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் அனைத்திலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டத்தில் பொருத்தப்பட்ட உப கரணங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இவற்றை சீரமைத்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நிருபர் குழு-