/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலப்பட தேயிலை துாள் கண்டறிய திடீர் சோதனை
/
கலப்பட தேயிலை துாள் கண்டறிய திடீர் சோதனை
ADDED : மார் 16, 2025 11:34 PM
குன்னுார்; குன்னுாரில் கலப்பட தேயிலையை கண்டறிய, உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து, தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள், ஏலம் விடப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் கலப்படம் செய்வதை தடுக்க தேயிலை வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தேயிலை துாள் விற்பனை கடைகளில், நறுமணம் மற்றும் நிறம் ஆகியவற்றுக்காக, வெவ்வேறு தொழிற்சாலைகளின் தேயிலை துாளை 'பிளண்டிங்' எனும் கலவை செய்து விற்கப்படுகிறது. அதில், சிலர் கலப்பட பொருட்களை பயன்படுத்தி கலப்படம் செய்து, கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து, தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் குன்னுாரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். பெட்போர்டு முதல் மவுன்ட்ரோடு, மார்க்கெட், வி.பி., தெரு வரையில், 40 கடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'இதன் விபரங்கள் வந்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.