/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் அருகே குப்பை மேலாண்மை மையத்தில் மறு மலர்ச்சி! துர்நாற்றம் வீசிய பகுதியில் வண்ண மயமான பூ வாசம்
/
குன்னுார் அருகே குப்பை மேலாண்மை மையத்தில் மறு மலர்ச்சி! துர்நாற்றம் வீசிய பகுதியில் வண்ண மயமான பூ வாசம்
குன்னுார் அருகே குப்பை மேலாண்மை மையத்தில் மறு மலர்ச்சி! துர்நாற்றம் வீசிய பகுதியில் வண்ண மயமான பூ வாசம்
குன்னுார் அருகே குப்பை மேலாண்மை மையத்தில் மறு மலர்ச்சி! துர்நாற்றம் வீசிய பகுதியில் வண்ண மயமான பூ வாசம்
ADDED : மே 02, 2025 08:34 PM

குன்னுார் ; குன்னுார் ஓட்டுப்பட்டறை குப்பை மேலாண்மை மையத்தில், துர்நாற்றம் நிலவிய பகுதிகளில், பூத்து குலுங்கும் வண்ண மலர்களால் பூவாசம் வீசுகிறது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில், நாள்தோறும், 5 டன் மட்காத குப்பை, 8 முதல் 9 டன் வரை மட்கும் குப்பை சேகரமாகிறது. இவை ஓட்டுப்பட்டறை அருகே உள்ள குப்பை குழியில் கொட்டப்படுகின்றன. இங்கு நகராட்சி நிர்வாகம், 'கிளீன் குன்னுார்' அமைப்பு குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து, மறுசுழற்சி பணிகளை கடந்த, 2019 நவ., மாதம் துவக்கியது.
மேலாண்மை மையத்தில் பூ வாசம்
இந்நிலையில், துர்நாற்றம் வீசிய இந்த இடத்தில் இயற்கை சூழலை கொண்டு வர, குப்பை மேலாண்மை உருவாக்கி புற்கள் பதித்து, பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்து பராமரித்து வருகிறது.
அதில், 'மேரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ், ஆஸ்டர், லில்லியம் வகைகள், ஹைடரான்சியா, ஆன்ட்ரானியம்,' பல்வேறு மலர்கள் பூத்து குலுங்குகிறது. துர்நாற்றம் அதிகரித்த சுற்றுப்புற பகுதிகளில் தற்போது பூ வாசம் வீசுகிறது. இதனால், இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் மனதிற்கு, உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
ஆர்கானிக் உரம் உற்பத்தி
இங்கு மட்கும் கழிவு களில் இருந்து, தயாரிக்கப்படும் ஆர்கானிக் உரம், விவசாயத்திற்கு மிகுந்த பலன் அளித்து வருகிறது.
குறிப்பாக கேரட், பீட்ரூட் போன்றவற்றிற்கு இந்த உரத்தை பயன்படுத்தியதில், நிறம் மற்றும் தரம் கூடுதலாக கிடைத்துள்ளது.
மட்கும் குப்பையில், 10ல் ஒரு பங்கு மட்டுமே உரம் தயாரிக்க முடியும். நிறைய மட்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. ரோட்டோரம் வெட்டப்படும் செடி, இலை, அடுப்புகரி, மரத்துாள் ஆகியவை இவற்றில் பயன்படுத்தினால் சற்று கூடுதல் உற்பத்தி கிடைக்கும்.
தேயிலை தொழிற்சாலை பயன்
அரசின் எஸ்.ஏ.டி.பி, திட்டத்தில், கிண்ணக்கொரை சிறு தேயிலை தோட்டங்களுக்கு இந்த உரம் வழங்கப்படுகிறது. இதே போல அரசு தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு பயன்படுத்தினால் இயற்கை விவசாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இங்கு நடக்கும் மறுசுழற்சி முறைகளை அறிந்து கொள்ள, நேபாள நாட்டு குழுவினர் இங்கு வந்து ஆய்வு செய்து சென்றனர். இதேபோல, இமாச்சல் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் அனில் ஜோஷி, பார்வையிட்டு இதன் விபரங்களை அங்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கேரள மாநிலம் அட்டப்பாடி பிளாக் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், அதிகாரிகளும் இதனை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
குப்பையால் மண் மலடாகிறது என்ற சூழ்நிலையில், அதே குப்பைகளால் மண்ணையும், உயிர்ப்பித்து கொண்டு வரலாம் என்ற இந்த முயற்சி நம் மாநிலத்தில் முன்னுதாரணமாக திகழ்கிறது.