/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பட்டியலில் மறு ஆய்வு அவசியம்! குளறுபடி நடப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு
/
கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பட்டியலில் மறு ஆய்வு அவசியம்! குளறுபடி நடப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு
கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பட்டியலில் மறு ஆய்வு அவசியம்! குளறுபடி நடப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு
கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பட்டியலில் மறு ஆய்வு அவசியம்! குளறுபடி நடப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : செப் 22, 2024 11:33 PM
பந்தலுார் : 'பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சியில், கலைஞர் கனவு இல்ல பயனாளிகள் பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரிய ஊராட்சியாக சேரங்கோடு உள்ளது. 75 கி.மீ., சுற்றளவை கொண்ட இங்கு, 159 கிராமங்கள் அமைந்துள்ளன.
ஊராட்சியில் தற்போது காங்., கட்சியை சேர்ந்த லில்லி ஏலியாஸ் என்பவர் தலைவராக உள்ளதுடன், 15 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர்.
ஊராட்சியில் குறிப்பிடும்படியான வளர்ச்சி பணிகள் ஏதும் இதுவரை மேற்கொள்ளாத நிலையில், பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் ஒப்பந்ததாரர்களாக மாறி, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணிகளை தனிநபர்கள் பயன்பெறும் வகையில், மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குள்ள அதிக அளவிலான பழங்குடியின கிராமங்களில், 'குடியிருப்புகள், குடிநீர், தெருவிளக்கு, சாலை,' என, எந்த வசதிகளும் நிறைவேற்றாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
புறகணிக்கப்படும் பழங்குடி கிராமங்கள்
இந்நிலையில், தற்போது கலைஞர் கனவு இல்லத்தின் கீழ், 271 பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடு வசதி இல்லாத குடிசை வீடுகளில் வாழும், பயனாளிகள் பயன்பெறும் வகையில் நிறைவேற்ற வேண்டிய இந்த திட்டத்தை, தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, வசதி படைத்தவர்களை பயனாளிகளாக தேர்வு செய்வதாக புகார் எழுந்து உள்ளது.
மேலும், ஊராட்சியில் உள்ளவர்களுக்கு மட்டும் வீடுகளை ஓதுக்க விதிமுறை உள்ள நிலையில், நகராட்சியில் சொந்த வீடு உள்ளவர்களையும், இந்த திட்டத்தில் பயனாளிகளுக்காக சேர்த்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
இந்நிலையில், கடந்த, 12 ஆம் தேதி ஊராட்சியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத, 3.58 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள்; தற்போது கலைஞர் கனவு இல்லத்தின் கீழ், விதிகளை மீறி பயனாளிகள் தேர்வு செய்து உள்ளது குறித்தும் பல்வேறு புகார்கள், மாவட்ட கலெக்டருக்கு சென்றுள்ளன.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கான, உத்தரவுகளை கூட வழங்க மறுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு, ஊராட்சியில் நிலவும் முறைகேடுகளை களைய, மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் கூறுகையில், ''கலைஞர் கனவு இல்ல வீடுகளை தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், வசதி படைத்த, சொந்த வீடுகள் உள்ளவர்களுக்கும் வீடு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், தலைவர் மற்றும் சில கவுன்சிலர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும். ஆதாரங்களுடன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனுவும் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் கூறுகையில், ''இந்த பணி குறித்து, உடனடியாக பணி மேற்பார்வையாளரை கொண்டு தணிக்கை செய்த பின்னர், தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் வீடுகட்டுவதற்கான உத்தரவு வழங்கப்படும்,'' என்றார்.