/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
/
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
ஆறு பேரை பலி வாங்கிய கோர சம்பவ பகுதியில்... மீண்டும் ஆய்வு!கட்டுமானத்தை முழுமையாக பார்வையிட உத்தரவு
ADDED : பிப் 12, 2024 01:30 AM

ஊட்டி:ஊட்டி அருகே கழிப்பிட கட்டடம் இடிந்து விழுந்து, 6 பெண்கள் பலியானதை அடுத்து, அங்குள்ள கட்டுமானங்களை மீண்டும் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊட்டி அருகே காந்திநகர் பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரிட்ஜோ, என்பவர் வீடு கட்டி வருகிறார். கடந்த, 6 மாதங்களாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
வீட்டை ஒட்டி, 40 அடி நீளம், 30 அடி உயரம், 6 அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது இடிபாடுகளில் சிக்கி, 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அலட்சியமே காரணம்
தேயிலை தோட்டம் நடுவே கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தில் விதிமீறல் நடப்பதாக, அப்பகுதி மக்கள் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், துயர சம்பவ நடந்த போது அங்கு வந்த மக்கள்,' இது குறித்து ஏற்கனவே புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,' என, அங்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், 'அதிகாரிகளின் அலட்சியமே இந்த பெரும் விபத்துக்கு காரணமாகி விட்டது,' பலர் கண்ணீர் விட்டனர்.
அச்சுறுத்தும் தடுப்பு சுவர்
காந்திநகர் பகுதிக்கு வந்த அமைச்சர்களிடம் மக்கள் கூறுகையில், 'ஊட்டி - மஞ்சூர் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின், 50 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர், அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மழை காலங்களில் இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அளித்துள்ளனர்.
விதி மீறல் இருந்தால் நடவடிக்கை
கலெக்டர் அருணா கூறுகையில், ''ஊட்டி அருகே காந்திநகரில் நடக்கும் கட்டுமான பணியின் போது, கழிப்பிட கட்டடம் சரிந்து விழுந்ததில் கட்டட இடிபாட்டில் சிக்கியதில், 6 பெண்கள் துரதிருஷ்ட வசமாக உயிரிழந்துள்ளனர். உடனே, நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அந்த கட்டடத்தை ஆய்வு செய்து 'சீல்' வைத்துள்ளனர். தவிர, மாவட்டத்தில் பிற பகுதிகளிலும், 48 விதி மீறிய கட்டடங்கருக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் கட்டட விதிமீறல் இருந்தாலும், புகார் அளித்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த பகுதியிலும் மீண்டும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
நீலகிரி தொகுதி எம்.பி.,ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''காந்திநகர் பகுதியில் பல அடி உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள கருங்கள் தடுப்பு சுவர் குறித்து புகார் வந்துள்ளது. மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளேன். அங்கு உடனடியாக மீண்டும் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.