/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
/
மாவட்டத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
ADDED : ஜன 27, 2024 03:21 AM

ஊட்டி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது.
ஊட்டி டி.ஆர்., பஜார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா ஜெனிபர் தேசிய கொடி ஏற்றி, தேச பக்தி குறித்து மாணவர்கள் இடையே எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் குழு தலைவர் ராம்தாஸ், மேலாண்மை குழு துணைத் தலைவர் லிங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆசிரியைகள் மாலதி, கீதா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
கோத்தகிரி கடசோலை அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ஆசிரியர் நஞ்சுண்டன் தேசிய கொடியேற்றி, தேச தலைவர்கள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர் குறித்து, மாணவர்களுக்கு விளக்கினார். ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ராஜேந்திரன் உட்பட, மாணவர்கள் பங்கேற்றனர். வாக்காளர் நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ் தேசிய கொடியேற்றி, ஒற்றுமையின் அவசியம் குறித்து பேசினார். தாளாளர் தன்ராஜ், இயக்குனர் சம்ஜித் மற்றும் இணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் தேச பக்தி பாடல், தலைவர்களின் வேடம் அணிந்து நடத்திய நாடகம், மாறுவேட போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது.
கூடலுார், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், ஆர்.டி.ஓ., முகமது குதரதுல்லா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைந்த கோர்ட்டில் நடந்த குடியரசு தின விழாவில், சார்பு நீதிபதி முகமதுஅன்சாரி தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாஜிஸ்திரேட் சசின்குமார், வக்கீல் சங்க தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூடலுார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் போலீசார் பங்கேற்றனர். தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி தேசியக்கொடி ஏற்றினார்.
நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியர் தேசிய கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் பரிமளா, கவுன்சிலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். கூடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றினார். ஒன்றிய தலைவர் கீர்த்தனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மசினகுடி, வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினர். ஊட்டியில் போலீசாரின் மோப்ப நாய்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

