/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட வளர்ச்சி பணிகள் அலுவலர்களின் ஆய்வு கூட்டம்
/
மாவட்ட வளர்ச்சி பணிகள் அலுவலர்களின் ஆய்வு கூட்டம்
ADDED : பிப் 05, 2024 09:36 PM
ஊட்டி;ஊட்டி, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில், வளர்ச்சி பணிகள் குறித்து, அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் அருணா முன்னிலை வைத்தார். இதில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், பொது நிதி திட்டங்களில் எடுக்கப்பட்ட பணிகளில், நடந்துவரும் பணிகள் மற்றும் முடிவு பெற்ற பணிகள் குறித்து, துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதே போல, பேரூராட்சிகள் சார்பில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி, சாலை பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், நபார்டு திட்டம், ஒன்றிய பொது நிதி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், துாய்மை பாரத இயக்கம், கழிப்பறை கட்டுதல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் நடந்து வரும் பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''அரசு அறிவிக்கும் திட்டங்களை, துறை அலுவலர்கள் தெரிந்து, மக்கள் பயன் பெறும் வகையில், சிறப்பாக செயல்படுத்த வேண்டும். முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவர வேண்டும். ஒதுக்கப்படும் நிதியை சரியான முறையில் பயன்படுத்தி, பணிகளை விரைந்து முடிப்பது அவசியம். பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில், பணிகளை தரமாக உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, நிர்வாக அனுமதி பெறப்பட்ட பணிகளை, தாமதமின்றி மக்கள் பாராட்டும் வகையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரியை, தமிழகத்தில் அனைத்து நிலையிலும் முதன்மை மாவட்டமாக மாற்றும் வகையில், அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்,'' என்றார்.

