ADDED : நவ 05, 2026 06:29 PM

கோத்தகிரி:
கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில், பாறை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த, இரு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில், நேற்று (நவ.,4) அதிகாலை கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையில், கோத்தகிரி– மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை அருகே உள்ள கொட்டக்கம்பை பகுதியில், சாலை ஓரத்தில் போதிய பிடிமானம் இல்லாத பாறை உருண்டு விழுந்தது. அதில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, பாறையை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
குறிப்பிட்ட இடத்தில், மழையின் போது, பாறைகள் விழாமல், சாலை துண்டிக்காமல் இருக்கவும், நெடுஞ்சாலை துறை சார்பில், நூற்றுக்கணக்கான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. வரும் நாட்களில், மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால், போக்குவரத்து தடை இல்லாமல் இருக்க, துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
