/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குளங்களாக மாறிய சாலைகள்: குளிக்கலாம் வாங்க...! மழையில் கரையும் நிலையில் பணியில் தரம் இல்லை
/
குளங்களாக மாறிய சாலைகள்: குளிக்கலாம் வாங்க...! மழையில் கரையும் நிலையில் பணியில் தரம் இல்லை
குளங்களாக மாறிய சாலைகள்: குளிக்கலாம் வாங்க...! மழையில் கரையும் நிலையில் பணியில் தரம் இல்லை
குளங்களாக மாறிய சாலைகள்: குளிக்கலாம் வாங்க...! மழையில் கரையும் நிலையில் பணியில் தரம் இல்லை
ADDED : அக் 16, 2025 08:22 PM

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழையில் 'கரைந்த' சாலைகள், மினி குளங்களாக மாறி வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பந்தலுார் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள், தமிழக- -கேரளா இணைப்பு சாலைகளாக உள்ளன. அத்துடன் கிராமங்களை, நகரப்பகுதிகளுடன் இணைக்கும் சாலைகளும் அதிகளவில் உள்ளது.
அதில், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள், நகராட்சி பராமரிப்பில் உள்ள முக்கிய சாலைகள், முழுமையாக சேதமடைந்து, குழிகளாகவும், மினி குளங்களாகவும் மாறி உள்ளன.
இந்த சாலைகளில் இயக்கப்படும் சிறிய வாகனங்களின் அடிபாகம் சாலையில் உராய்ந்து அடிக்கடி பழுதடைகிறது. மேலும், தேயிலை மற்றும் நேந்திரன் வாழை, கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் சாலையில் உள்ள குழிகளில் சிக்கி பழுதடைந்து, நடுவழியில் நிற்பது வாடிக்கையாக மாறி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், பொன்னானியில் இருந்து ஊட்டி சென்ற அரசு பஸ் நெல்லியாளம் அருகே குழியில் சிக்கி பழுதடைந்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'பந்தலுார் சுற்று வட்டார பகுதியில் சாலைகள், தரமற்ற முறையில்தான் சீரமைக்கப்படுகிறது. அதில் சில இடங்களில், 5- கி.மீ., துார சாலையை ஒரே நாளில், பெயரளவிற்கு சீரமைத்து விடும் நிலை தொடர்வதால், சாலை தரம் மிகவும் மோசமாக உள்ளது. பல இடங்களில் சாலைகள் குளம் மாநில உள்ளதால், இனி மக்கள் குளிக்க கூட பயன்படுத்தலாம்.
சாலையின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை யாரும் கண்டு கொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.