ADDED : செப் 22, 2026 05:53 PM
பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில் சாலையை அகலப்படுத்துவதாக கூறி, மண் அகற்றியதால் மரங்கள் விழும் நிலையில் உள்ளன.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை -பாட்டவயல் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒப்பந்ததாரர் ஒருவர், பிதர்காடு முதல் கைவட்டா வரையிலான, 2- கி.மீ. தூரம் சாலையோர மண்ணை அகற்றினார்.
அகற்றப்பட்ட மண் இதே ஒப்பந்ததாரர் மேற்கொள்ளும் வேறு பகுதி சாலை சீரமைப்பு பணிக்காக வாகனங்களை எடுத்து செல்லப்பட்டது. சாலை ஓரத்தில் மண் அகற்றப்பட்ட பகுதியில், மரங்கள் விழும் நிலையில் உள்ளதுடன், சாலையோர கால்வாய்களும் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
மக்கள் கூறுகையில்,‘இப்பகுதி சாலையை அகலப்படுத்துவதாக கூறி, ஒப்பந்ததாரரின் தேவைக்காக மண்ணை எடுத்து சென்ற செயல் குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆபத்தான மரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தி, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்,’ என்றனர்.
