/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் பயிர் சேத இழப்பீடு
/
விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் பயிர் சேத இழப்பீடு
ADDED : செப் 18, 2025 08:52 PM

ஊட்டி; நீலகிரியில், 307 விவசாயிகளுக்கு மழையால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் கோரிக்கை கூட்டத்தில், பங்கேற்ற பல விவசாயிகள் கூறியதாவது:
கூடலுார் பகுதியில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட பலத்த காற்றால் வாழை விவசாயம் பாதித்தது. வருவாய்,தோட்டக்கலைக்துறை சேத மதிப்பீடுகளை கணக்கெடுப்பு நடத்தினர். அதற்கான நஷ்ட ஈடு கிடைத்தால் தற்போது உள்ள சூழ்நிலையில் பயனாக இருக்கும். மானிய திட்டத்தில் பாகற்காய் பயிர் செய்வதற்கு மானியம் வழங்க வேண்டும். வாழையில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 'பேசிலோமைசிஸ், சனோசினஸ்' உள்ளிட்ட மருந்துகளை அதிகளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயத்திற்கு ஏற்ற மழை காலம் என்பதால் விவசாயிகளுக்கு மானிய விலையில் கேரட், பீட்ரூட் போன்ற விதைகள் உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளின் பட்டா நிலத்தில் உள்ள கிணறுகளுக்கு சொந்த செலவில் சிமென்ட் வளையம் அமைக்கும் பணிக்கு குப்பேட்டா இயந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட முழுவதும் வனவிலங்கு தொல்லை அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தவிர, தேயிலை வாரியம், வேளாண் துறை, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் கீழ் உள்ள மனுவில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
ரூ. 17லட்சம் பயிர் சேத இழப்பீடு தோட்டுக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி பேசுகையில், ''நடப்பாண்டு பெய்த கனமழையின் போது, ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்க, 102 எக்டர் பரப்பளவிற்கான இழப்பீடு தொகை, 17 லட்சம் ரூபாய், 307 விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோட்ட கலைத்துறையின் வாயிலாக விவசாய பணிகள் மேற்கொள்ள மட்டுமே சிறிய வகை குப்பேட்டா இயந்திரம் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது இதர பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
தேசிய தோட்டக்கலை இயக்கம், 2025-26 திட்டத்தில் பரப்பு விரிவாக்கம் இனத்தில், 120 எக்டர் பரப்பளவிற்கு பீட்ரூட் மற்றும் பீன்ஸ் விதைகள் வட்டார அளவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.