ரூ.3.54 கோடி திடக்கழிவு மேலாண்மை திட்டம்: ஆளும்கட்சி நிர்வாகிகள் தலையீடு உள்ளதாக புகார்
ரூ.3.54 கோடி திடக்கழிவு மேலாண்மை திட்டம்: ஆளும்கட்சி நிர்வாகிகள் தலையீடு உள்ளதாக புகார்
UPDATED : அக் 30, 2026 05:29 PM
ADDED : அக் 30, 2026 05:24 PM
குன்னுார்: ‘குன்னுாரில் நடக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆளும்கட்சி தலையீடு இல்லாமல் செயல்படுத்த வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
‘குன்னுார் நடக்கும் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை, தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே பணிபுரியும் நிறுவனங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க கூடாது,’ என, உத்தரவு பிறப்பித்த மாநில அரசு, நவ., 15க்குள் நகர வாழ்வாதார மையங்கள் (சி.எல்.சி.,) மூலம் பணிகளை துவங்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ‘82 துாய்மை பணியாளர்கள், 21 ஓட்டுனர்கள், 5 மேற்பார்வையாளர்கள்,’ என, மொத்தம், 108 ஒப்பந்த பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு செலவு, 3.54 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பு கூட்டம் நேற்று தலைவர் சுசீலா, கமிஷனர் (பொ) , துணை தலைவர் வாசிம் ராஜா முன்னிலையில் நடந்தது.
அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜ்குமார் பேசுகையில்,‘‘தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும். மகளிர் சுய உதவி மூலம் பணம் வழங்கும் நடைமுறையில், ஆளும் கட்சி நிர்வாகிகள் தலையீடு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில், கையாடல் நடக்க வாய்ப்புள்ளது,’’ என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் ஜாகிர் பேசுகையில்,‘‘அம்மா உணவகம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தி.மு.க., பெயரை மாற்றாமல் செயல்படுத்தியது. தற்போது துப்புரவு பணியாளர்களுக்கு இடை தரகர்கள் இல்லாமல் நேரடியாக சம்பளம் வழங்குவது வரவேற்கத்தக்கது. தனியார் ஒப்பந்ததாரரால் நியமிக்கபட்ட போது பி.எப்., உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.
இந்த திட்டத்தில், சம்பந்தப்பட்ட குழுவின் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விபரம் வெளியிட வேண்டும். சில குறிப்பிட்ட நபர்கள் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உரிய விசாரணை நடத்த வேண்டும். நடைமுறைகள் குறித்து முழு ஆய்வு செய்த பின்னரே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,’’ என்றார். இதே கோரிக்கையை, ராமசாமி, மன்சூர் உட்பட கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
