ரூ.42.50 லட்சம் செலவில் தற்காலிக கடைகள் வீண்: ‘பார்க்கிங்’ இடமாக மாறிய வளாகம்
ரூ.42.50 லட்சம் செலவில் தற்காலிக கடைகள் வீண்: ‘பார்க்கிங்’ இடமாக மாறிய வளாகம்
UPDATED : அக் 16, 2026 04:29 AM
ADDED : அக் 16, 2026 04:25 AM

குன்னுார்: குன்னுார் உழவர் சந்தை பகுதியில், 42.50 லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தற்காலிக கடைகள் பாழடைந்து வருவதுடன், பார்க்கிங் இடமாக மாறி உள்ளது.
குன்னுார் நகராட்சி நுாற்றாண்டு பழமையான மார்க்கெட் கட்டடங்களை இடித்து மறுசீரமைக்கும் திட்டத்திற்காக ஓராண்டிற்கு முன்பு உழவர் சந்தை பகுதியில், பொது நிதி மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட ஆரம்ப கட்ட முன்னேற்பாட்டு நிதி, 42.50 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன.
இந்த இடத்தில் கடைகள் மாற்றினால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அறிந்து இங்கு கடைகள் மாற்றுவது கைவிடப்பட்டது. மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் எவ்வித பயன்பாடும் இன்றி வீணாக பாழடைந்து வருகிறது. அந்த இடம் தற்போது வாகன பார்க்கிங் இடமாக மாறியுள்ளன. இதன் அருகில் புதிதாக அமைத்த. அரசு நகர்புற சுகாதார நிலையத்திற்கு வர நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
உழவர் சந்தை செல்லும் சாலையோர நகராட்சி மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான அரசு காலி இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இருந்து சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் நேரில் புகார் தெரிவித்தனர்.
எனவே, இப்பகுதியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, மக்கள் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
