/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சூழல் பூங்காவாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு! இயற்கையை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு

ADDED : மார் 22, 2025 12:26 AM

ஊட்டி; ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சூழல் பூங்காவாக மாற்ற பட்ஜெட்டில், 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் துவக்கப்பட உள்ளது.
ஊட்டி நகரில் மையப் பகுதியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்த நிலையில், பல கோடி ரூபாய் வரி; குத்தகை பாக்கி வைத்தது. இதை தொடர்ந்து, நடந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, இந்த நிலத்தை மீண்டும் வருவாய் துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையப்படுத்தினர்.
தொடர்ந்து, 54 ஏக்கர் பரப்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சூழல் பூங்காவாக மாற்றும், மாநில அரசின் உத்தரவுப்படி, தோட்டக்கலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.
ரூ. 70 கோடி ஒதுக்கீடு
இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில், ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை சுற்று சூழல் பூங்காவாக மாற்றம் செய்ய, 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டி நகரில் மேலும் ஒரு பூங்கா, சுற்றுலா பயணிகளுக்கு தயாராகி வருகிறது.
அதுவும் இயற்கை அழகை பேணிக் காக்கும் வகையில், சூழல் பூங்காவாக உருவாகும் நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில்,''சூழல் சுற்றுலா மிகவும் அவசியமானது. நீலகிரியில் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் அவற்றின் வாழ்க்கை முறைகளை புரிந்து கொள்ள இந்த சுற்றுலா அவசியமானதாக இருக்கும். இயற்கை சுற்றுலா பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் மன அழுத்தத்தை போக்கும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள், பொது மக்களுக்கு ஏற்படும்,'' என்றார்
தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''சூழல் பூங்கா அறிவிப்புக்கு பின் தோட்டக்கலை துறை மூலம் ரேஸ்கோர்ஸ் மைதானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த எவ்வித தகவலும் எங்களுக்கு வரவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் வந்த பின் அதற்கான பணிகள் துவக்கப்படும்,'' என்றார்.